ஸ்பெஷல்

‘கடைசிக் காலத்தில் கவனித்துக் கொள்பவர்களுக்கு சொத்தில் பெரும்பான்மை அளிக்க பெற்றோருக்கு உரிமை உண்டு’ உச்சநீதிமன்றம் தீர்ப்பு. 

கார்த்திகா வாசுதேவன்

50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கு இது. வயதான பெற்றோரில் தந்தை இறந்ததும் அவரது உயில் குடும்பத்தார் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. உயிலில் இருந்த வாசகங்களைக் கேட்டதும் குடும்பத்தில் அனைவருக்கும் அதிர்ச்சி. காரணம், தன் சொத்தில் பெரும்பகுதியை, கடைசிக் காலத்தில் தன்னை கவனித்துக் கொண்ட வாரிசுக்கு எழுதிவைத்திருந்தார் அந்தத் தந்தை. பிற வாரிசுகள் சும்மா விட்டு விடுவார்களா என்ன? உடனே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள்.

என் தந்தையை இறுதிக் காலத்தில் கவனித்துக் கொள்வதாகச் சொல்லி அழைத்துச் சென்ற வாரிசு, அவருக்குச் சாதகமாக அதிகப்படியான சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டார். சட்டப்படி இந்த உயில் செல்லாது. மரணத்தறுவாயில் முதியவரின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி அந்தச் சொத்தை அவர் எழுதி வாங்கியிருப்பார் என்று நினைக்கச் சாத்தியங்கள் உண்டு. எனவே இந்த உயில் செல்லாது எனத் தீர்ப்பளித்து மாற்று உயில் மூலமாக தந்தையின் சொத்துக்களை சரிவிகிதமாக அவரது குழந்தைகள் அனைவருக்குமாகப் பங்கிட வேண்டும் எனக்கோரி நீதிமன்றத்திற்குச் சென்றனர் இறந்தவரின் இதர வாரிசுகள்.

இந்த வழக்கு போடப்பட்டது 1970 களில் ஆனால் இதற்கு அப்போதே மாவட்ட அளவிலான நீதிமன்றத்தில் இறந்தவரின் உயிலைச் செல்லாது என அறிவிக்க முடியாது. அவர் இந்த உயிலை எழுதும் போது பூரண நலத்துடன் தான் இருந்தார் எனும் போது அவரிஷ்டப்படியே தனது சொத்துக்களைப் பங்கிடும் உரிமை அவருக்கு உண்டு. எந்தக் குழந்தைக்கு எவ்வளவு என முடிவெடுக்கும் உரிமையானது அவரது மனதிற்கு உகந்ததாகவே இருந்திருக்கக் கூடும். அந்த மனநிலையை குறிப்பிட்ட அந்த வாரிசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று சொல்வதைக்காட்டிலும் பெற்றவரின் அன்பை அவர் அதிகமாகச் சம்பாதித்திருக்கக் கூடும் என்றும் நாம் இந்த வழக்கில் எடுத்துக் கொள்ள இயலும். இப்போது சொத்துக்காக வழக்காடும் பிற வாரிசுகள் தன் தந்தை மீதான உரிமையை அவர் உயிரோடு இருக்கும் காலத்தில் அவரைக் கவனித்துக் கொள்வதில் காட்டியிருக்கலாம். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு இப்போது தந்தை மீதான உரிமையை அவரது சொத்துக்களை அடைவதில் மட்டும் காட்டுவது நியாயமானது இல்லை. 

நாடு, மதம், மொழி, இன வித்தியாசங்கள் கடந்து இன்று உலகை அச்சுறுத்தும் பிரச்னைகளில் ஒன்றாக நிற்கிறது இறுதிக் காலத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்டு தவிக்கும் முதியோரின் பரிதாபநிலை. அப்படிப் பட்ட நிலையில் தங்கள் பெற்றோரைத் தவிக்க விட்டு விட்டு அவர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களுக்காக மட்டுமே நீதிமன்றப் படியேறுவதென்பது முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பான செயல். இந்த சுயநல அணுகுமுறையை நீதிமன்றம் எக்காரணம் கொண்டும் அனுமதிக்காது. எனவே கடைசிக் காலத்தில் எந்த வாரிசுகள் தம் பெற்றோரை கவனித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கே சொத்தில் பெரும்பான்மையை எழுதி வைக்கும் உரிமை பெற்றோருக்கு உண்டு என ஜஸ்டிஸ் நவின் சின்ஹா மற்றும் இந்திரா பானர்ஜி இருவரும் இணைந்த உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பளித்தது.
 

இளமையில் பிள்ளைகளைப் பெற்றோர் கவனித்துக் கொள்வதில் குறைந்தபட்சம் 10 % அன்பையும், கடமையுணர்வையுமாவது பிள்ளைகள் வயதான காலத்தில் தம் பெற்றோரைக் கவனித்துக் கொள்வதில் காட்ட வேண்டும். இல்லையேல் கடமை தவறிய பிள்ளைகள் ஆவார்கள், இதை நான் சொல்லவில்லை உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பு சுட்டிக் காட்டுகிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரல் மாதிரியை பயன்படுத்தி புதிய வகை மோசடி: மின் வாரியம் எச்சரிக்கை

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

SCROLL FOR NEXT