கோப்புப்படம் ENS
ஸ்பெஷல்

குழந்தைப் பிறப்பினால் ஆண்களுக்கும் மன அழுத்தம் ஏற்படும்!

குழந்தை பிறந்த பின்னர், தந்தையர்களில் 10-ல் ஒருவர் கவலை, மனச்சோர்வுக்கு ஆளாவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இணையதளச் செய்திப் பிரிவு

ஒரு குழந்தை பிறக்கும்போது தாயின் வாழ்க்கை மாறுகிறது. அந்த குழந்தைக்காக யோசித்து அதற்கேற்ப தன்னுடைய வாழ்க்கையை தகவமைத்துக் கொள்கிறார். குழந்தையைப் பார்க்கும்போது மகிழ்ச்சி இருந்தாலும் இதுவரை இல்லாத உடல்ரீதியான, மன ரீதியான பிரச்னைகளை எதிர்கொள்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

மகப்பேறுக்கு பிறகான தாய்மார்களின் மனச்சோர்வு குறித்து ஆய்வுக் கட்டுரைகள் பல உள்ளன. அதுகுறித்து இணையங்களில்கூட அதிகம் பேசப்படுகிறது.

அதேபோல குழந்தை பிறக்கும்போதும் பிறந்த பின்னரும் தந்தையின் வாழ்க்கையும் மாறுவது பற்றி எத்தனை பேர் பேசியிருக்கிறார்கள்? அவர்களும் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

குழந்தை பிறந்த பின்னர், தந்தையர்களில் 10-ல் ஒருவர் கவலை, மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள் என்கிறது ஆய்வு. இது குழந்தையின் நலனையும் எதிர்காலத்தில் அவர்களது நடவடிக்கைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

'தாய்மார்களுக்கு குழந்தை பிறந்து ஒரு சில மாதங்களுக்குதான் மன அழுத்தம் இருக்கும். ஆனால், தந்தைக்கு எந்த நேரத்திலும் ஏற்படலாம் , இது தாமதமாகவே அறியப்படுகிறது. குழந்தை கருவில் இருக்கும் முதல் மூன்று மாதங்களும் 3-6 வயது காலகட்டத்திலும் ஆண்களுக்கு அதிக மன அழுத்தம் இருப்பதாக 2019-ல் மெட்டா ஆய்வு கூறுகிறது.

தந்தைக்கும் இந்த நேரத்தில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கிறது, குறிப்பாக மனைவி மற்றும் குழந்தையிடம் இருந்து இடைவெளி இருப்பதாக உணர்கிறார்கள், தூக்கம் கெடுகிறது, மன ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு முடிவுகள்.

அறிகுறிகள் என்னென்ன?

திடீரென கோபம் வருவது, எரிச்சல்.

மது அருந்துவது, புகைப்பிடிப்பது என உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது.

வேலையில் ஆர்வமின்மை.

தலை வலி, தசை வலி, வயிறு அல்லது செரிமான பிரச்னைகள்.

கவனக்குறைவு.

உறவிலிருந்து விடுபட நினைத்தல்.

தற்கொலை எண்ணங்கள்கூட ஏற்படலாம்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் கண்டிப்பாக மன நல ஆலோசகரை அணுக வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஹைதராபாத் அகாதெமியின் உளவியலாளர் டாக்டர் ஸ்மிதா பாலகிருஷ்ணன், 'குழந்தைப்பேறு என்பது தாய், தந்தையர் இருவருக்கும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடினமானதுதான். இவை அர்த்தமற்றவை என்று சொல்ல முடியாது' என்று கூறினார்.

புரிதல் அவசியம்

ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும்போது தாய், தந்தை இருவரின் வாழ்க்கைச்சூழலும் மாறுகிறது. நிதி சார்ந்த பிரச்னைகள் தவிரவும், தம்பதியினரிடையேயான பிணைப்பு குறைவதைக் காணலாம். இருவருக்கு இடையே ஏற்படும் இடைவெளியினால் வாக்குவாதங்கள் ஏற்படலாம். ஆனால், உங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டையிடக் கூடாது. ஏனெனில் அவர்கள் உங்களைப் பார்த்துதான் அனைத்தையும் கற்றுக்கொள்கிறார்கள். முடிந்தவரை ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

உடல்நலம்

தாய்க்கு எப்படி உணவு, தூக்கம் எல்லாம் பாதிக்கப்படுகிறதோ தந்தைக்கும் அதுவேதான். எனவே, தந்தையர்களும் தங்கள் உடல்நலத்தைப் பேண வேண்டும். சரியான நேரத்துக்கு சாப்பிடவும், குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும். 15 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்யவும். உங்களுக்காக நேரம் ஒதுக்கி உங்கள் மனநலத்தையும் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

சமூகம்

சமூகத்தில் உள்ள அழுத்தங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் எது சரி எனத் தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள். ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருங்கள். குழந்தையுடன் உங்களின் நேரத்தைச் செலவிடுங்கள்.

மருத்துவ உதவி

ஆண்களைப் பொருத்தவரை பிரச்சனைகள் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்வதில்லை. சாதாரணமாகவே இருப்பார்கள். ஆனால், நீங்களும் ஒரு சாதாரண மனிதர்தான் என்பதால் உங்கள் மன அழுத்தத்தைப் போக்க உதவி தேவைப்படலாம். எனவே, மனநல நிபுணரிடம் செல்ல யோசிக்க வேண்டாம். உங்களுடைய மன அழுத்தம் உங்கள் குழந்தையின் மனநலனையும் பாதிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT