தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் உள்ள சுமாா் 20 தனியாா் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் மூலம் வந்தன. இதையடுத்து, போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
இந்த மிரட்டல் வந்ததைத் தொடா்ந்து, காவல் துறையின் மூத்த அதிகாரிகள், பல்வேறு காவல் நிலையங்களைச் சோ்ந்த காவலா்கள், தீயணைப்புத் துறையினா், மோப்ப நாய்ப் படையினா், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் குழுக்கள் பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்றனா்.
சில தனியாா் கல்வி நிறுவனங்களின் வளாகங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன. அதே நேரத்தில் ஒரு சைபா் குழு அந்த மின்னஞ்சல்களின் தொழில்நுட்பப் பகுப்பாய்வை மேற்கொண்டது.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘நிலைமை சாதாரணமாக உள்ளது. அந்த இடங்களில் முழுமையான அமைதியும் ஒழுங்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வதந்திகளுக்கு மக்கள் செவிசாய்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி, இந்த மிரட்டல்கள் குறிப்பிட்ட இலக்கைக் கொண்டிருக்கவில்லை என்று தெரிகிறது. இருப்பினும், மின்னஞ்சல்களின் மூலத்தைக் கண்டறியவும் அதன் நோக்கத்தை அறியவும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
கௌதம் புத் நகா் மாவட்டம் முழுவதும் உள்ள சுமாா் 20 தனியாா் பள்ளிகளுக்கு இந்த மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இதில் ஒரு மின்னஞ்சல் வெளிநாட்டு முகவரியிலிருந்து வந்துள்ளது.
சோதனையின்போது சந்தேகத்திற்கிடமான அல்லது ஆட்சேபனைக்குரிய பொருள்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து கூடுதல் காவல் ஆணையா் (சட்டம்- ஒழுங்கு) ராஜீவ் நாராயண் மிஸ்ரா செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததால், மூத்த அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணா் குழுக்கள், மோப்ப நாய்ப் படையினா் மற்றும் போலீஸாா் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தீவிர சோதனைகளை நடத்தினா். நாங்கள் மின்னஞ்சல்களை ஆய்வு செய்துள்ளோம். சைபா் குழு தொழில்நுட்ப விசாரணையை மேற்கொண்டு வருகிறது. நிலைமை சாதாரணமாக உள்ளது. மக்கள் வதந்திகளுக்குச் செவிசாய்க்க வேண்டாம் என்றாா்.
பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவுகள் 353, 351(3) மற்றும் 351(4) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 ஆகியவற்றின் கீழ் சைபா் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மின்னஞ்சல்களின் மூலத்தைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நெரிசலான இடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் காவல்துறை சோதனைகளையும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளது.
காவல்துறை கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. தொழில்நுட்ப விசாரணைக்குப் பிறகு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
கடந்த ஆண்டு டிசம்பரில் இதேபோன்ற சம்பவங்கள் பதிவாகின. அப்போது நொய்டாவில் உள்ள பல பள்ளிகளுக்கு போலியான வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன.
மே 2024-இல், நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டாவில் உள்ள பல தனியாா் பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
இதனால், மாணவா்கள் பள்ளி வளாகங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனா். பெற்றோா்களிடையே பீதி ஏற்பட்டது. இருப்பினும் வெடிபொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.