தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் கேப்டன் ரோஹித் சர்மா படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறப் போகும் வீரர்கள் யார்?

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழு கூட்டம் நாளை (ஜனவரி 18) நடைபெறவுள்ளது.

DIN

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழு கூட்டம் நாளை (ஜனவரி 18) நடைபெறவுள்ளது.

ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்திய அணிக்கான போட்டிகள் தவிர்த்து, மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளன. இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான தங்களது அணியை அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் கிட்டத்தட்ட அறிவித்துவிட்டன. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அணித் தேர்வுக்குழு கூட்டம் அஜித் அகர்கர் தலைமையில் நாளை (ஜனவரி 18) நடைபெறுகிறது.

ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறுவாரா?

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின்போது, தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசவில்லை.

இந்திய அணியின் மிக முக்கியமான பந்துவீச்சாளரான பும்ரா தசைப் பிடிப்பால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாட முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் அணியில் இடம்பெறுவாரா? மாட்டாரா? என்ற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ரோஹித் சர்மா அணியை கேப்டனாக வழிநடத்துவார் எனக் கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சியை முன்கூட்டியே ரோஹித் சர்மா தொடங்கிவிட்டார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெறுவாரா?

23 வயதாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் அற்புதமான ஃபார்மில் இருக்கிறார். இடது கை வீரர் என்பதால் அணிக்கு அது கூடுதல் பலமாக அமையும். அவர் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறுவாரா என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்திய அணியின் டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருப்பதால், அணியில் இடம்பெறுவதற்கான போட்டி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் இடையே கடுமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரையும் அணியில் தேர்வு செய்வது தேர்வுக்குழுவுக்கு மிகவும் சவாலாக இருக்கும்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பளித்து, கே.எல்.ராகுலுக்கு சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட வாய்ப்பளிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்திய அணியின் பிரதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது. இரண்டாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தெரிவாக துருவ் ஜுரெல் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

கருண் நாயருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

விஜய் ஹசாரே தொடரில் கருண் நாயர் மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்த தொடரில் இதுவரை 752 ரன்கள் விளாசியுள்ளார். அவரது சராசரி 752 என நம்பமுடியாத விதமாக இருக்கிறது. இதுவரை 5 சதங்களும் விளாசியுள்ளார்.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், இந்திய அணியில் நடுவரிசை ஆட்டக்காரர்கள் குவிந்து கிடக்கிறார்கள். குறிப்பாக, ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பிடிக்கும் போட்டியில் இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வேண்டுமானால் கருண் நாயர் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது.

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ் காயத்திலிருந்து மீண்டு, பந்துவீச்சு பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதனால், சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறுவதற்கு அவர் தயாராக இருக்கிறார்.

வேகப் பந்துவீச்சாளர்களை பொருத்தவரையில், முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து சிறப்பாக பந்துவீசி வருகிறார். முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் போன்ற வீரர்களும் வரிசையில் இருக்கிறார்கள். பிரசித் கிருஷ்ணா சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியிலும் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்பது நாளை தேர்வுக்குழு கூட்டம் முடிந்தவுடன் தெரியவரும்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT