குல்தீப் யாதவ்  (கோப்புப் படம்)
கிரிக்கெட்

2-வது டெஸ்ட்டில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவாரா? முன்னாள் இங்கிலாந்து வீரரின் அறிவுரைகள் உதவுமா?

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவாரா என்பது குறித்து...

DIN

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 2) முதல் தொடங்குகிறது.

முதுகுப் பிடிப்பு காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறமாட்டார் எனக் கூறப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்ட பும்ரா, 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இருப்பினும், மற்ற பந்துவீச்சாளர்கள் சரியான நேரத்தில் விக்கெட்டுகள் வீழ்த்த தவறியதால், பும்ரா மீதான பணிச்சுமை அதிகரித்தது.

முதல் போட்டியில் குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாததும் பெரிய அளவில் பேசப்பட்டது. அவர் கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தார். அதன் பின், அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. ஆசிய நாடுகளைத் தவிர்த்து, மற்ற நாடுகளில் அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவாரா? பீட்டர்சனின் அறிவுரை உதவுமா?

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்திய அணிக்காக இதுவரை குறைந்த அளவிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், குல்தீப் யாதவ் நன்றாகவே செயல்பட்டுள்ளார். இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள குல்தீப் யாதவ், 56 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

இங்கிலாந்து தொடர் குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கொடுத்த அறிவுரைகள் குறித்து குல்தீப் யாதவ் கூறியதாவது: ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக கெவின் பீட்டர்சன் இருந்தார். இங்கிலாந்து தொடர் குறித்து அவர் நிறைய விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். ஃபீல்டிங், ஆடுகளம் மற்றும் பேட்டர்களின் மனநிலை குறித்து அறிவுரை வழங்கினார். இங்கிலாந்தில் விளையாடுவதற்கு வீரர் ஒருவரின் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அவரது அனுபவங்களைக் கூறினார்.

இங்கிலாந்தில் வேகப் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகள் வீழ்த்துவார்கள். அவர்களுக்கு உறுதுணையாக சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீச வேண்டும் எனக் கூறுவார்கள். ஆனால், அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற மனநிலையுடன் பந்துவீச வேண்டும் என பீட்டர்சன் கூறினார். 15 அல்லது 20 ஓவர்கள் வீசும் வாய்ப்பு கிடைத்தால், விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் எனக் கூறினார் என்றார்.

On whether Kuldeep Yadav will be included in the Indian team's playing eleven for the second Test against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மிதுனம்

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

அமரன்கள் செய்த அநீதிகளைப் பேசும் தண்டகாரண்யம்..! சர்ச்சையான பதிவு?

ஆங்கிலேய ஆட்சியருக்கு தரிசனம்...

SCROLL FOR NEXT