ஒருநாள் போட்டிகளில் அதிவேக அரைசதம் விளாசி தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸின் சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் மேத்யூ ஃபோர்டு சமன் செய்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: ரோஹித் சர்மா, விராட் கோலி இடத்தை நிரப்புவது கடினம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (மே 23) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் விளையாடியது.
கீஸி கார்ட்டி சதம், மேத்யூ ஃபோர்டு அதிவேக அரைசதம்
முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களான பிரண்டன் கிங் 8 ரன்களிலும், எவின் லீவிஸ் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, கீஸி கார்ட்டி மற்றும் கேப்டன் சாய் ஹோப் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருப்பினும், கேப்டன் சாய் ஹோப் 57 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அமீர் ஜாங்கோ 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடிய கீஸி கார்ட்டி சதம் விளாசி அசத்தினார். அவர் 109 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ராஸ்டன் சேஸ் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய மேத்யூ ஃபோர்டு சிக்ஸர் மழை பொழிந்தார்.
அதிரடியாக விளையாடிய அவர் 16 பந்துகளில் அரைசதம் விளாசி ஒருநாள் போட்டிகளில் அதிவேக அரைசதம் விளாசிய தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸின் சாதனையை சமன் செய்தார்.
அதிரடியாக விளையாடிய அவர் 19 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். ஜஸ்டின் கிரீவ்ஸ் 36 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
அயர்லாந்து தரப்பில் லியம் மெக்கார்த்தி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜோஷ்வா லிட்டில் மற்றும் பேரி மெக்கார்த்தி தலா 2 விக்கெட்டுகளையும், ஜியார்ஜ் டாக்ரெல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு அயர்லாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக அயர்லாந்து அணியின் பேட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.