இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு முதல் முறையாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்குகிறது.
முன்னதாக, இந்திய அணியின் மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்த குறுகிய இடைவெளியில் டெஸ்ட் போட்டிகளிலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இவர்களது ஓய்வு முடிவு அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய வீரர்கள் யார்? யார்? என்ற விவரம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணை கேப்டனாக ரிஷப் பந்த்தும் நியமியக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் தொடக்க ஆட்டக்காரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சாய் சுதர்சனுக்கு முதல்முறையாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போல, அபிமன்யு ஈஸ்வரனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவரைத் தொடர்ந்து உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் கருண் நாயருக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 2016 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தனது முதல் சதத்தையே முச்சதமாக மாற்றி அசத்தியிருந்தார் கருண் நாயர். அந்தப் போட்டியில் 303* ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருது வென்ற அவர் அதன்பின்னர் சரியாக சோபிக்காததால் அணியிலிருந்து கலட்டிவிடப்பட்டார். அவருக்கு தற்போது மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஐபிஎல் ஏலத்தில் விற்பனை ஆகாமல் போன நிலையில், லக்னௌ அணிக்காக பாதியில் இணைந்து அசத்தலாக விளையாடி விக்கெட் வீழ்த்தி அசத்திய ஷர்துல் தாக்குருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முழு உடல் தகுதியை எட்டாததால் இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா மற்றும் பேட்டர் சர்ப்ராஸ் கான் இருவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி விவரம்
ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த்(துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
இதையும் படிக்க: இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் ஷுப்மன் கில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.