அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹட்டில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் பால் ஸ்டிரிலிங் அதிகபட்சமாக 60 ரன்களும், கேட் கார்மைக்கேல் 59 ரன்களும் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் மெஹிதி ஹாசன் மிராஸ் 3 விக்கெட்டுகளையும், ஹாசன் முரட், ஹாசன் மஹ்முத் மற்றும் தைஜுல் இஸ்லாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேசம் 587 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் மஹ்முதுல் ஹாசன் ஜாய் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ இருவரும் சதம் விளாசி அசத்தினர். மஹ்முதுல் ஹாசன் ஜாய் 171 ரன்களும், ஷாண்டோ 100 ரன்களும் எடுத்தனர். மோமினுல் ஹேக் 82 ரன்களும், ஷாத்மன் இஸ்லாம் 80 ரன்களும் எடுத்தனர்.
அயர்லாந்து தரப்பில் மேத்யூ ஹம்பிரிஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
வங்கதேசத்தைக் காட்டிலும் 301 ரன்கள் பின் தங்கிய நிலையில், அயர்லாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
இரண்டாவது இன்னிங்ஸில் அயர்லாந்து அணி 254 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், வங்கதேசம் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் அயர்லாந்து அணியில் ஆண்டி மெக்பிரின் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, பால் ஸ்டிரிலிங் 43 ரன்களும், ஆண்ட்ரூ பல்பிர்னி 38 ரன்களும் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் ஹாசன் முரத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தைஜுல் இஸ்லாம் மூன்று விக்கெட்டுகளையும், நஹித் ராணா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேச அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.