ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் இன்று (நவ.21) காலை பெர்த்தில் உள்ள ஆப்டஸ் கிரிக்கெட் திடலில் தொடங்கியது.
தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் களம் புகுந்தனர். வழக்கம்போலவே, ஆஷஸ் தொடர் என்றாலே அசுர வேகத்தில் பந்து வீசக்கூடிய மிட்செல் ஸ்டார்க்கின் இந்தத் தொடரில் முதல் போட்டியின் முதல் ஓவரிலேயே இங்கிலாந்து வீரர் ஜாக் கிராவ்லியைத் திணறிடித்தார்.
முதல் 5 பந்துகளை எதிர்கொண்ட ஜாக் கிராவ்லி, முதல் ஓவரின் கடைசிப் பந்தை அடிக்க முயன்று ஸ்லிப்பின் நின்ற கவாஜாவிடம் சிக்கினார். இதனால், ரன் ஏதுமின்றி அவர் வெளியேறினார்.
முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்ததையடுத்து பென் டக்கெட் மற்றும் ஆலி போப் இருவரும் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருப்பினும், இவர்களையும் தனது வேகத்தால் ஸ்டார்க் திணறடித்தார்.
2-வது விக்கெட்டுக்கு 33 ரன்கள் சேர்த்த நிலையில், பென் ட்க்கெட், ஸ்டார்க்கிடம் எல்பிடபிள்யூ முறையில் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து ரசிகர்களின் ஆரவாரத்துடன் நுழைந்த நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட் 7 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதுமின்றி ஸ்டார்க்கின் பந்துவீச்சில் லாபுஷேனிடம் சிக்கினார்.
பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்த ஹாரி ப்ரூக், 5 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 52 ரன்கள் எடுத்து அறிமுக வீரர் டாக்கெட்டின் பந்து வீச்சில் அலெக்ஸ் கேரியிடன் கேட்ச்சாகி பெவிலியன் திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து ஆலி போப் 46 ரன்களிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களிலும் ஸ்டார்க்கிடமே சிக்கினர்.
இங்கிலாந்து அணி 30.2 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்களைக் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணித் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், பிரெண்டன் டாக்கெட், கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.