சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து அணியின் பிரபல ஆல்ரவுண்டர் ஓய்வு பெறுவதாக இன்று (செப்டம்பர் 29) அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கிறிஸ் வோக்ஸ், அவரது 15 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்படாத நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை கிறிஸ் வோக்ஸ் எடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
36 வயதாகும் கிறிஸ் வோக்ஸ் இங்கிலாந்து அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2034 ரன்களையும், 192 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 122 ஒருநாள் போட்டிகள் மற்றும் 33 டி20 போட்டிகளில் விளையாடி அவர் 204 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 1524 ரன்களும், டி20 போட்டிகளில் 147 ரன்களும் எடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து கிறிஸ் வோக்ஸ் தெரிவித்திருப்பதாவது: ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன். அதனால், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக முடிவெடுத்துள்ளேன். சிறு வயதிலிருந்தே இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எனக்குள் இருந்தது. அதிர்ஷ்டவசமாக, இங்கிலாந்து அணிக்காக விளையாடி என்னுடைய கனவை நனவாக்கி அதில் வாழ்ந்துவிட்டது மிகவும் நம்பமுடியாத விதமாக இருக்கிறது. இங்கிலாந்து அணிக்காக கடந்த 15 ஆண்டுகளாக விளையாடியது மிகவும் பெருமையாக இருக்கிறது என்றார்.
அண்மையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றுவதற்காக கிறிஸ் வோக்ஸ், கையில் கட்டுடன் பேட்டிங் செய்ய வந்து அனைவரது இயதங்களையும் வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.