இந்திய அணியில் சீக்கிரம் இடம்பிடித்திருந்தால் தன்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள நேரம் கிடைத்திருக்காது என அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. துபையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 9-வது முறையாக ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா ஆட்ட நாயகனாகவும், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட அபிஷேக் சர்மா தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா இந்த ஆசிய கோப்பை தொடர் முழுவதுமே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். நடப்பு ஆசிய கோப்பை தொடரில் 314 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
இந்த நிலையில், இந்திய அணியில் சீக்கிரம் இடம்பிடித்திருந்தால் தன்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள நேரம் கிடைத்திருக்காது என அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: என்னுடன் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய வீரர்கள் சிலர் நேரடியாக இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடினர். ஆனால், சிலர் அனைத்துப் படிநிலைகளையும் கடந்து வரவேண்டியிருந்தது. நான் அனைத்துப் படிநிலைகளையும் கடந்து வர வேண்டியிருந்தது என்பதை உணர்ந்தேன். நேரடியாக இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடும் வாய்ப்பு கிடைத்திருந்தால், என்னால் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்க முடியாது.
நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு எனக்கு அதிக நேரம் கிடைத்தது. என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. வீரர்கள் பலருக்கும் இதுபோன்ற வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இந்திய அணியுடனான என்னுடைய பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதிசயங்கள் கண்டிப்பாக நடக்கும்.
பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியை அழுத்தம் நிறைந்த போட்டியாக நான் ஒருபோதும் நினைக்கவில்லை. அனைத்துப் போட்டிகளுக்கும் நாங்கள் ஒரே மாதிரியாகவே தயாரானோம். என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இருவரும் மிகுந்த ஆதரவளித்தனர். அதன் காரணமாகவே என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்ததாக நினைக்கிறேன். அணி நிர்வாகத்திடமிருந்து இது போன்று ஆதரவு கிடைப்பது மிகவும் முக்கியம் என்றார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அபிஷேக் சர்மா இடம்பெற்று விளையாடினார். ஆனால், அவர் மூத்த வீரர்கள் இடம்பெற்று விளையாடும் தேசிய அணியில் இடம்பிடிக்க 6 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை பிரித்வி ஷா கேப்டனாக வழிநடத்தினார். அடுத்த ஆண்டிலேயே பிரித்வி ஷா இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். அதேபோல, அபிஷேக் சர்மாவுடன் இணைந்து விளையாடிய சக வீரரான ஷுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அறிவுறுத்துவதை பின்பற்றுகிறார் சூர்ய குமார்; கிரிக்கெட்தான் அவமரியாதை! பாகிஸ்தான் கேப்டன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.