நேபாளத்துக்கு எதிரான போட்டியில் பெற்ற முதல் வெற்றியின் மூலம் இத்தாலி அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இத்தாலியின் வரலாற்று வெற்றிக்கு சகோதரர்களும் தொடக்க ஆட்டக்காரர்களான ஜஸ்டின் மோஸ்கா மற்றும் அந்தோனி மோஸ்கா இருவரும் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர்.
கடந்த மார்ச் 7 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்கடே திடலில் இன்று (பிப்ரவரி 12) நடைபெற்ற லீக் சுற்றின் 17-வது போட்டியில் நேபாளம் மற்றும் இத்தாலி அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நேபாளம் முதலில் விளையாடியது. முதலில் விளையாடிய நேபாளம் இத்தாலி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆரிஃப் ஷேக் 27 ரன்களும், கேப்டன் ரோஹித் பௌடல் 23 ரன்களும் எடுத்தனர். ஆசிஃப் ஷேக் 20 ரன்கள் எடுத்தார். இத்தாலி தரப்பில் கிறிஷன் கலுகாமேஜ் 3 விக்கெட்டுகளையும், பென் மனேண்ட்டி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அலி ஹாசன், ஸ்மட்ஸ், ஜஸ்பிரித் சிங் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இத்தாலி அபார வெற்றி!
பின்னர், 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இத்தாலி அணி, 12.4 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சகோதரர்களான தொடக்க ஆட்டக்காரர்களான ஜஸ்டின் மோஸ்கா மற்றும் அந்தோனி மோஸ்கா இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினர்.
ஜஸ்டின் மோஸ்கா 44 பந்துகளில் 60 ரன்களும் (5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), அந்தோனி மோஸ்கா 32 பந்துகளில் 62 ரன்களும் (3 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். இவர்களின் விக்கெட்டை நேபாள அணியால் கடைசி வரை எடுக்க முடியவில்லை.
கால்பந்துப் போட்டிகளில் ஜொலித்து வரும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி அணி முதன்முதலாக டி20 உலகக் கோப்பையில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி, வரலாற்றில் முதல் வெற்றியையே 10 விக்கெட் வித்தியாசத்தில் பதிவு செய்திருக்கிறது. மொத்தம் 76 பந்துகளை எதிர்கொண்ட இத்தாலி அணி 124 ரன்கள் எட்டியிருக்கிறது.
டி20 உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்த இத்தாலி அணிக்கு சச்சின் டெண்டுல்கர், இர்ஃபான் பதான், இயான் பிஷப் உள்ளிட்டோரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
சாதனை படைத்த சகோதரர்கள்
பவர்-பிளே ஓவர்களில் அதிரடியைக் காட்டிய மோஸ்கா சகோதரர்கள் முதல் ஆறு ஓவர்களில் 68 ரன்கள் குவித்து அசத்தினர். இணை நாடுகள் பவர்பிளேயில் அடித்த அதிகபட்ச ரன்னாக இது பதிவானது.
சந்தீப் லேமிச்சனேவின் 11-வது ஓவரில் அந்தோணி மோஸ்கா - ஜஸ்டின் மோஸ்கா இருவரும் அரைசதம் அடித்தனர்.
அந்தோணி மோஸ்கா - ஜஸ்டின் மோஸ்கா இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்தனர். இதற்கு முன்னதாக 2014 ஆம் ஆண்டு பாகிஸ்தான் வீரர்கள் கம்ரன் அக்மல் - உமர் அக்மல் சகோதரர்கள் இணைந்து இவரும் 96 ரன்கள் பார்ட்னர் ஷிப் அமைத்திருந்தனர். அதனை மோஸ்கா சகோதரர்கள் முறியடித்துள்ளனர். இணை நாடுகளில் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களைக் கடந்த மூன்றாவது பார்ட்னர் ஷிப்பாக அமைந்தது.
சர்வதேச டி20 போட்டிகளில் 500 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் அந்தோணி மோஸ்கா படைத்துள்ளார். அவர் 4 அரைசதங்களுடன் 554 ரன்களும், அவரது சகோதரர் ஜஸ்டின் 4 அரைசதங்களுடன் 441 ரன்கள் குவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.