வில்லியம்சன், சமத் போராட்டம் வீண்: இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது தில்லி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தில்லி கேபிடல்ஸ் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தில்லி கேபிடல்ஸ் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.
13-வது ஐபிஎல் சீசனின் 2-வது குவாலிபையர் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது.
தில்லி பேட்டிங்: தவான் அதிரடி ஆட்டம்: ஹைதராபாத்துக்கு 190 ரன்கள் இலக்கு
190 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர்கள் களமிறங்கினர். இந்த முறை கேப்டன் டேவிட் வார்னருடன் பிரியம் கர்க் களமிறங்கினார். ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய முதல் ஓவரில் பிரியம் கர்க் சிக்ஸர் அடித்து அதிரடி தொடக்கம் தந்தார். ஆனால், ககிசோ ரபாடா வீசிய 2-வது ஓவரின் முதல் பந்திலேயே வார்னர் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும் அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே அதிரடியைத் தொடங்க ரன் ரேட் குறையவில்லை.
திருப்புமுனை ஏற்படுத்திய 4-வது ஓவர்:
4-வது ஓவரை மார்கஸ் ஸ்டாய்னிஸ் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் பிரியம் கர்க் (17 ரன்கள்), 6-வது பந்தில் மணீஷ் பாண்டே (21 ரன்கள்) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதன்பிறகு, கேன் வில்லியம்சனுடன் ஜேசன் ஹோல்டர் இணைந்தார். இந்த இணை சிறிய பாட்னர்ஷிப்பை அமைத்தது. வில்லியம்சன் தொடக்கத்தில் நிதானம் காட்டி படிப்படியாக ரன் ரேட்டை உயர்த்தத் தொடங்கினார். ஆனால், ஒத்துழைப்பு தர வேண்டிய ஹோல்டர் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
எனினும், வில்லியம்சன் நம்பிக்கையுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்து களமிறங்கிய அப்துல் சமத்தும் வந்த வேகத்தில் பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடிக்க வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் குறையத் தொடங்கியது. இதனிடையே, வில்லியம்சனும் 35-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.
இதனால், கடைசி 5 ஓவர்களில் ஹைதராபாத் வெற்றிக்கு 61 ரன்கள் தேவைப்பட்டன.
இந்த நிலையில், ஸ்டாய்னிஸ் வீசிய 17-வது ஓவரில் வில்லியம்சன் ஆட்டமிழந்தார். அவர் 45 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார்.
எனினும், ரஷித் கான் மற்றும் சமத் களத்தில் இருந்ததால் ஹைதராபாத்துக்கு நம்பிக்கை இருந்தது. அஸ்வின் வீசிய 18-வது ஓவரில் ரஷித் கான் சிக்ஸரும், பவுண்டரியும் அடிக்க கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டன.
19-வது ஓவரை ரபாடா வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தில் சமத் சிக்ஸர் அடிக்க தில்லிக்கு நெருக்கடி இருந்து வந்தது. ஆனால், 3-வது பந்தில் சமத் (16 பந்துகள் 33 ரன்கள்) ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ரஷித் கான் (11 ரன்கள்), அதற்கடுத்த பந்தில் கோஸ்வாமி (0) ஆட்டமிழந்தனர். இந்த விக்கெட்டுகளுக்கு இடையே ரபாடா வைட் வீசியதால் ஹாட்ரிக் வாய்ப்பு இல்லாமல் போனது.
கடைசி ஓவரில் நோர்க்கியா 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்க ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், தில்லி கேபிடல்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.
தில்லி தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகளையும், ஸ்டாய்னிஸ் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.