சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா. இதன்மூலம் 2-ஆவது வெற்றியைப் பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோற்ற தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது.
இதையடுத்து வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள 2-ஆவது அரையிறுதியில் வங்கதேசத்தை இந்திய அணி சந்திக்கவுள்ளது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதன் ரன் ரேட் +1.370 ஆகும். திங்கள்கிழமை நடைபெறும் இலங்கை-பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் எந்த அணி வென்றாலும், இந்தியாவின் ரன் ரேட்டை எட்டுவது கடினம். எனவே பி பிரிவில் இந்தியாவின் முதலிடம் உறுதியாகியுள்ளது. அதனால் ஏ பிரிவில் 2-ஆவது இடத்தைப் பிடித்த வங்கதேசத்துடன் அரையிறுதியில் மோதுகிறது இந்தியா.
இலங்கை-பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணி, ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்த இங்கிலாந்து அணியை முதல் அரையிறுதியில் சந்திக்கவுள்ளது. இந்த ஆட்டம் வரும் 14-ஆம் தேதி நடைபெறுகிறது.
ஒருவேளை இந்தியா இங்கிலாந்துடன் மோதுகிற சூழலும் உருவாகலாம். அதற்கு பாகிஸ்தானோ இலங்கையோ அசாத்தியமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் 265+ ரன்கள் வித்தியாசத்திலும் இலங்கை 294+ ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி 2-ம் இடத்துக்குக் கீழிறங்கும். அதன்படி இங்கிலாந்துடன் மோதவேண்டிய நிலைமை உருவாகும்.
ஆனால் இதற்கான சாத்தியம் மிகக்குறைவு என்பதால் அரையிறுதியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அ இலங்கை, இந்தியா - வங்கதேசம் என்றுதான் போட்டிகள் அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.