முகப்பு
செய்திகள்

உலக ஹாக்கி லீக் அரையிறுதி : பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா

உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் இந்திய அணி தனது 3-ஆவது ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:47 PM
பகிர்:

உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் இந்திய அணி தனது 3-ஆவது ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது.
இதன்மூலம் தொடர்ந்து 3-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள இந்திய அணி, காலிறுதியை உறுதி செய்தது. அதேநேரத்தில் தொடர்ந்து 3-ஆவது தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் காலிறுதி வாய்ப்பை இழந்தது.
லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய இந்திய அணி 13-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இந்த கோலை ஹர்மான்பிரீத் சிங் அடித்தார். இதையடுத்து தல்விந்தர் சிங் 21 மற்றும் 24-ஆவது நிமிடங்களில் கோலடிக்க, இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது.
33-ஆவது நிமிடத்தில் ஹர்மான்பிரீத் சிங் தனது 2-ஆவது கோலை அடிக்க, 47-ஆவது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் கோலடித்தார். அதைத் தொடர்ந்து 49-ஆவது நிமிடத்தில் பிரதீப் மோர் கோலடிக்க, இந்தியா 6-0 என முன்னிலை பெற்றது.
அதேநேரத்தில் மறுமுனையில் போராடிய பாகிஸ்தான் 57-ஆவது நிமிடத்தில் கோலடிக்க, 59-ஆவது நிமிடத்தில் 7-ஆவது கோலை அடித்தது இந்தியா. இந்த கோலை ஆகாஷ்தீப் சிங் அடித்தார். இதன்மூலம் இந்தியா 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வென்றது.
இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி கண்டதன் மூலம் 'பி' பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியிருக்கும் இந்தியா, காலிறுதியை உறுதி செய்துள்ளது. இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்தை சந்திக்கிறது. இந்த ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
கறுப்பு பட்டை அணிந்து விளையாடிய இந்தியர்கள்!
எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய வீரர்கள் தங்களின் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

முழு கட்டுரையைப் படிக்க →