டி20 உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது பாகிஸ்தான் அணி.
சிட்னியில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது நியூசிலாந்து அணி. இரு அணிகளிலும் மாற்றம் எதுவுமில்லை. இந்த ஆட்டத்துக்கு முன்பு டி20 உலகக் கோப்பையில் சிட்னியில் முதலில் பேட்டிங் செய்த 6 அணிகளில் 5 அணிகளுக்கு வெற்றிகள் கிடைத்துள்ளன. இன்று மழை அறிகுறி எதுவும் இல்லாததால் பரபரப்பான ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலாக இருந்தார்கள். நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஃபின் ஆலனை முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்கச் செய்தார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி. முதல் பந்தில் பவுண்டரி அடித்தார் ஆலன். அடுத்தப் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவித்தார். ஆனால் பந்து, பேட்டில் பட்டு பிறகு கால்காப்பில் பட்டதால் டிஆர்எஸ் முறையீட்டின் வழியாகத் தப்பித்தார் ஆலன். ஆனால் அடுத்தப் பந்திலும் எல்பிடபிள்யூ ஆனார் ஆலன். டிஆர்எஸ் முறையீடு இந்த முறை உதவவில்லை. இதனால் முதல் ஓவரிலே ஃபின் ஆலனை வீழ்த்தி பாகிஸ்தானுக்கு அருமையான தொடக்கத்தை அளித்தார் ஷாஹீன் அப்ரிடி.
முதல் 6 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்தது. கான்வே 21 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். பிறகு கிளென் பிளிப்ஸை 6 ரன்களுக்கு வீழ்த்தி அசத்தினார் நவாஸ். இதனால் நியூசிலாந்து அணி தடுமாறியது. அதன்பிறகு நல்ல கூட்டணி அமைத்து மேலும் விக்கெட்டுகள் விழாமல் வில்லியம்சனும் டேரில் மிட்செல்லும் பார்த்துக்கொண்டார்கள். 17-வது ஓவரில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் வில்லியம்சன். அணியின் சரிவைத் தடுத்து நிறுத்தி 32 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார் மிட்செல்.
நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. மிட்செல் 53, நீஷம் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். கடைசி 5 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து. ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த உலகக் கோப்பைப் போட்டியில் விமர்சனத்துக்கு ஆளான பாபர் ஆஸம் - ரிஸ்வான் ஜோடி இன்று அபாரமாக விளையாடியது. பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தார்கள். அதிரடியாக விளையாட முயலாமல் கவனமாக ரன்கள் சேர்த்து இலக்கை நோக்கி நகர்ந்தார்கள். 12 ஓவர்கள் வரை நியூசிலாந்தால் பாபர் - ரிஸ்வான் ஜோடியைப் பிரிக்க முடியவில்லை. 42 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார் பாபர். அப்போது ஸ்கோர் 105. ரிஸ்வான் 43 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து 17-வது ஓவரின் முடிவில் ஆட்டமிழந்தார். 26 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த முகமது ஹாரிஸ் கடைசியில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
நாளை நடைபெறும் 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
டி20 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். அந்த ஆசை நிறைவேறப் போகிறதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.