மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. உலகக் கோப்பைப் போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய அணி நான்கு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரு பயிற்சி ஆட்டங்களிலும் அக்டோபர் 17 அன்று ஆஸ்திரேலியா, அக்டோபர் 19 அன்று நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக காபா மைதானத்திலும் இந்திய அணி விளையாடவுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. 2-வது பயிற்சி ஆட்டம் பெர்த்தில் இன்று நடைபெற்றது. 2-வது பயிற்சி ஆட்டத்தில் கே.எல். ராகுல் கேப்டனாகச் செயல்பட்டார். ரோஹித் சர்மா, கோலி, சூர்யகுமார் யாதவ், சஹால் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் அஸ்வின் இடம்பெற்றார்.
முதலில் பேட்டிங் செய்த மேற்கு ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. நிக் ஹாப்சன் அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார். அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முக்கியப் பேட்டர்கள் இல்லாமல் விளையாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கே.எல். ராகுல் அதிகபட்சமாக 74 ரன்கள் எடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.