முதல் ஒருநாள்: இருவர் அரைசதம்; இந்தியாவுக்கு 231 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஆகஸ்ட் 2) கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ களமிறங்கினர். அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து, களமிறங்கிய குஷல் மெண்டிஸ் 14 ரன்களிலும், சதீரா சமரவிக்கிரம 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் சரித் அசலங்கா 14 ரன்களில் ஆட்டமிழக்க, பதும் நிசங்கா மற்றும் துனித் வெல்லாலகே இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி இலங்கை அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பதும் நிசங்கா 75 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.
வனிந்து ஹசரங்கா 35 பந்துகளில் 24 ரன்கள் (ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள்) எடுத்தும், அகிலா தனஞ்ஜெயா 21 பந்துகளில் 17 ரன்கள் (2 பவுண்டரிகள்) எடுத்தும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய துனித் வெல்லாலகே 65 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது சிராஜ், ஷிவம் துபே, குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.