முகப்பு
செய்திகள்

ரஞ்சி கோப்பை: தமிழ்நாட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை!

ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டியில் மும்பை அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Updated On : 4 மார்ச் 2024, 4:04 pm IST
பகிர்:

ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டியில் மும்பை அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ரஞ்சி கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று முன் தினம் (மார்ச் 2) தொடங்கின. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் விளையாடின.

முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழக அணியில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 44 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 43 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனையடுத்து, மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

Advertisement

Advertisement

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 353 ரன்கள் எடுத்திருந்தது. தனுஷ் கோட்டியான் 74 ரன்களுடனும், துஷார் தேஷ்பாண்டே 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தமிழ்நாட்டைக் காட்டிலும் மும்பை அணி 207 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. மும்பை அணி 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்குர் 109 ரன்களும், தனுஷ் கோட்டியான் 89* ரன்களும் எடுத்தனர். தமிழ்நாடு தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மும்பை அணி 232 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழக அணியில் பாபா இந்திரஜித் அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் ஷாம்ஸ் முலானி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஷர்துல் தாக்குர், மோஹித் அஸ்வதி மற்றும் தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் மும்பை அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாட்டை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி வருகிற மார்ச் 10 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.