தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் உலகக் கோப்பையிலும் தனது அதிரடியான ஆட்டத்தைத் தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் பயங்கர கார் விபத்தில் சிக்கினார். அதன்பின் 14 மாத இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் நடப்பு ஐபிஎல் தொடரின் மூலமாக கிரிக்கெட் வாழ்க்கைக்குத் திரும்பினார். இதற்கிடையில், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 2023 மற்றும் இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை ஆகியவற்றை ரிஷப் பந்த தவறவிட்டார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் மீண்டும் கிரிக்கெட் வாழ்க்கைக்குத் திரும்பிய ரிஷப் பந்த தனது சிறப்பான ஆட்டத்தினால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் தொடக்கப் போட்டிகளில் சிறிது தடுமாற்றான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், அடுத்தடுத்தப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த் 446 ரன்கள் எடுத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் கடைசிப் போட்டியில் விளையாடிய பிறகு ரிஷப் பந்த் பேசியதாவது: மீண்டும் கிரிக்கெட் விளையாடவந்தது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இந்தியா முழுவதிலிருந்தும் எனக்கு கிடைத்த ஆதரவு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. நான் விளையாடும்போது ஒவ்வொருவரிடமுமிருந்து கிடைத்த ஆதரவு நல்ல உணர்வைக் கொடுத்தது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நான் கிரிக்கெட் விளையாடினேன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆடுகளத்தில் களமிறங்கி விளையாடிய ஒவ்வொரு தருணமும் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது என்றார்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த், முதன்மையான விக்கெட் கீப்பராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனும் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதுபோல டி20 உலகக் கோப்பையிலும் ரிஷப் பந்த் சிறப்பாக செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை ரிஷப் பந்த் உறுதி செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் வருகிற ஜூன் 5 ஆம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.