அமெரிக்க அணியால் எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும் என அந்த அணியின் துணைக் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடர் நடைபெறும் நாடுகளில் ஒன்றான அமெரிக்கா அதன் சிறப்பான ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கிரிக்கெட்டில் பெரிய அளவில் அனுபவம் இல்லாத அமெரிக்க அணி கனடாவை முதல் போட்டியில் வீழ்த்தியது.
அதன்பின், முன்னாள் உலகக் கோப்பை சாம்பியனான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அந்த அணிக்கு மட்டுமல்லாது, கிரிக்கெட் உலகுக்கும் அதிர்ச்சியளித்தது. நேற்று அமெரிக்கா மற்றும் அயர்லாந்துக்கு எதிரான போட்டி மழை காரணமாக நடைபெறவில்லை. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன்மூலம், அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.
இந்த நிலையில், அமெரிக்க அணி முறையாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டால், உலகின் எந்த ஒரு அணியையும் எங்களால் வீழ்த்த முடியுமென அந்த அணியின் துணைக் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சூப்பர் 8 சுற்றில் வரவிருக்கும் சவாலை எதிர்கொள்ள காத்திருக்கிறோம். கடந்த 2 வாரங்களாக எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். எங்களால் எந்த ஒரு நாட்டின் முழுமையான அணியையும் வீழ்த்த முடியும் என்பதைக் காட்டியுள்ளோம். நேர்மையாக கூறவேண்டுமென்றால், அமெரிக்க கிரிக்கெட்டுக்கு பலரும் பெரிதாக கவனம் கொடுக்கவில்லை.
நாங்கள் எந்த அளவுக்கு சிறந்த வீரர்கள் என இந்த உலகுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது ஒருவிதத்தில் எங்களுக்கு சாதகமாகவும் இருந்தது. முறையாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டால், எங்களால் உலகின் எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.