தமிழகத்திற்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் ஜி.எஸ்.டி சட்டத்திருத்தம்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!
விரைவில் அறிமுகபடுத்தப்பட உள்ள ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையில் தமிழகத்திற்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
புதுதில்லி: விரைவில் அறிமுகபடுத்தப்பட உள்ள ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையில் தமிழகத்திற்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை அமல் செய்வது தொடர்பாக தில்லியில் இன்று மாநில அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டார். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை என்பது 18 விதமான வரிகளை உள்ளடக்கியது. நான்கு விதமான வரி விதிப்பு முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பு முறையை அமல் செய்வதன் மூலம் நிதி இழப்பு ஏற்படும் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது.
இன்றைய கூட்டத்தில் வரி விதிப்பு முறை குறித்து கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. மேலும் தமிழகத்திற்கு உரிய இழப்பீடு வழங்கும் வகையில் உரிய சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
தமிழக முதல்வரை பொறுத்த வரையில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை குறித்து தெளிவான பார்வை உள்ளது. அதே சமயம் மாநிலங்களின் உரிமையை விட்டுக் கொடுக்க கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளார்
இவ்வாறு பாண்டியராஜன் தெரிவித்தார்.