பொதுசிவில் சட்டத்திற்கு குஷ்பு ஆதரவு: வரவேற்கும் தமிழிசை!
பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான குஷ்பு ஆதரிப்பது வரவேற்கத்தக்க விஷயம் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார் .
சென்னை: பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான குஷ்பு ஆதரிப்பது வரவேற்கத்தக்க விஷயம் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார் .
பிரபல நடிகையும் , காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளருமான குஷ்பூ, சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் , பொது சிவில் சட்டத்தை வரவேற்கிறேன் என்னும் பொருள் பட கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளதாவது:
பொதுசிவில் சட்டத்தை எதிர்ப்பது என்பது பெண்ணுரிமைக்கு எதிரான ஒரு செயலாகும். இதனை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குஷ்பு ஆதரிப்பதை நாங்கள் வரவேற்கிறோம். இஸ்லாமிய சமூகத்தில் பிறந்து வளர்ந்த குஷ்பு பொதுசிவில் சட்டத்தை ஆதரிப்பது நல்ல விஷயம்தான். இதை அனைவருமே வரவேற்க வேண்டும் என்பதே பாரதிய ஜனதாவின் கருத்து. .
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.