முகப்பு
தமிழ்நாடு

கருணாநிதி செயல்படும் நிலையில் இருந்தால்...மு.க.ஸ்டாலின்

கருணாநிதி செயல்படும் நிலையில் இருந்தால் ஆர்க்காடு வீராசாமி மூலம் தமிழக அரசியலில் மாற்றம் செய்திருப்பார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:21 PM
81-ஆவது பிறந்த நாள் விழாவில் மனைவியுடன் முன்னாள் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி. உடன் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,
பகிர்:

கருணாநிதி செயல்படும் நிலையில் இருந்தால் ஆர்க்காடு வீராசாமி மூலம் தமிழக அரசியலில் மாற்றம் செய்திருப்பார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர்க்காடு வீராசாமியின் 81-ஆவது பிறந்தநாள் விழா அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.21) நடைபெற்றது.
கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது: திமுகவின் சொத்தாக இருப்பவர் ஆர்க்காடு வீராசாமி. மிசா காலத்தில் நான் சிறைப்பட்டிருந்தபோது என்னைப் பாதுகாத்தவர் அவர். மிசா காலத்தில் அடக்குமுறைக்குப் பயந்து பலர் இயக்கத்தை விட்டே வெளியேறிச் சென்ற நிலையில், என் உயிரே போனாலும் திமுகவை விட்டுச் செல்ல மாட்டேன் என்றவர். இதுபோன்ற முன்னோடிகளால்தான் எல்லாச் சோதனைகளையும் திமுக தாங்கி நிற்கிறது.
ஆர்க்காடு வீராசாமியிடம் யார் எந்த கோரிக்கைக்காகச் சென்றாலும் உடனே கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விடுவார். அவரிடம் எந்தப் பணியை ஒப்படைத்தாலும் கருணாநிதி சொன்னால் அதை முடித்துக் கொடுத்து விடுவார். கட்சி ரீதியான பிரச்னைகள் மாத்திரமல்ல, எங்கள் குடும்பப் பிரச்னைகளில்கூட தூதுவராக அவர்தான் செயல்பட்டுள்ளார். இதன் காரணமாகவே, முரசொலி மாறன் அவரை புறா என்றே அழைப்பார்.
இப்போது தமிழக அரசியலில் அணிகளைச் சேர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் கருணாநிதி செயல்படும் நிலையில் இருந்தால், ஆர்க்காடு வீராசாமி மூலம் தமிழகத்தில் நிச்சயம் அரசியல் மாற்றம் செய்திருப்பார் என்றார் அவர்.
ஸ்டாலின்-அன்புமணி சந்திப்பு: பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விழாவுக்கு வந்தார்.
மேடையேறிச் சென்ற அவர் ஆர்க்காடு வீராசாமிக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், மு.க.ஸ்டாலினை சந்தித்து கை குலுக்கினார்.
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கிருஷ்ணசாமி, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்பட பலர் பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.

முழு கட்டுரையைப் படிக்க →