அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா பேனர் அகற்றம்: முன்பும், பின்பும்
அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டு, ஜெயலலிதா படம் கொண்ட பேனர்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டு, ஜெயலலிதா படம் கொண்ட பேனர்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வி.கே.சசிகலாவின் படங்கள் அடங்கிய பேனர்கள் நேற்று காலை அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் அடங்கிய புதிய பேனர்கள் வைக்கப்பட்டன.
ஆனால், பதவியேற்பு நாள் குறிக்கும் முன்னரே, உச்ச நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான தேதி வெளியானதால், 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.
சசிகலாவை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான ஒரு அணி கட்சியை விட்டு வெளியேறியது. இவ்விரு அணிகளுமே தாங்கள்தான் அதிமுக என்று சொல்லி வந்த நிலையில், அதிமுக கட்சி மற்றும் சின்னத்தையே தேர்தல் ஆணையம் முடக்கியது.
இந்த இரட்டை இலைச் சின்னத்தை தன் அணிக்கே வழங்க தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்றதாக, சசிகலாவால் துணைப் பொதுச் செயலர் ஆக்கப்பட்ட டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளார்.
இதற்கிடையே, அதிமுகவில் இருந்து பிரிந்த இரண்டு அணிகளும், மீண்டும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் 7 பேர் கொண்ட குழுவும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு அணியினரும் சந்தித்துப் பேச திட்டமிடப்பட்டு, ஆனால், தேதி முடிவாகாமல் இழுபறியில் உள்ளது.
முன்னதாக, சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சசிகலாவின் புகைப்படங்கள் இடம்பெறும் பேனர்களை அகற்றுமாறு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் வலியுறுத்தியிருந்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினால் ஏற்பட்ட துயரம் தமிழக மக்களின் இதயத்தைவிட்டு இன்றும் அகலவில்லை. அவரது மர்ம மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், கழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற விசுவாசத் தொண்டர்களின் குரல்தான், தமிழக மக்களின் குரல்தான் நாங்கள் தொடங்கியிருக்கும் தர்மயுத்தத்தின் குரல்.
விசுவாசத் தொண்டர்களின், தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் அந்த தர்மயுத்தத்தின் வீரியத்தைக் குறைப்பதற்கு சிலர் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தர்மயுத்தத்தின் வீரியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சசிகலாவின் புகைப்படங்களை அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து உடனே அகற்றி அதன் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்று விசுவாசத் தொண்டர்களின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வி.கே.சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை இரு அணிகளுக்கிடையேயான சமரச முயற்சிக்கு முதல்படியாக அமையலாம் எனக் கருதப்பட்டது.
இரு தரப்பிலும் தொலைபேசி வாயிலாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் ஓரிரு நாளில் இரண்டு அணியின் சார்பில் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவினரும் நேரில் சந்தித்துப் பேச உள்ளனர் என்று நேற்று ஓ.பன்னீர்செல்வமும் கூறியிருந்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இது எங்கள் சொந்த முடிவு என்று அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியிருந்தார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், டிடிவி தினகரன் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை அவர் பார்த்துக் கொள்வார். நாங்கள் ஒதுங்கிவிட்டோம் என்றார்.
இரு அணிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து கேட்டதற்கு, ஓபிஎஸ் அணி எப்போது வந்தாலும் பேசத் தயார் என்று பதிலளித்தார்.
சசிகலாவின் பேனர்களை அகற்றியது பற்றிய கேள்விக்கு, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் பேனர்களை அகற்றியது, நாங்கள் எடுத்த சுய முடிவு என்றார் அமைச்சர்.
தமிழக அரசியலில் நடக்கும் பல்வேறு குழப்பங்களுக்கு இடையே இதுபோன்ற சின்ன சின்ன நிகழ்வுகளும் பொதுமக்களை நின்று கவனிக்க வைக்கும்படியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.