முகப்பு
தமிழ்நாடு

செயல்படாத நிர்வாகிகள் அதிமுக அம்மா அணியிலிருந்து நீக்கப்படுவார்கள்: சசிகலா சகோதரர் வி. திவாகரன்

அதிமுக அம்மா அணியில் செயல்படாமல் இருக்கும் கட்சி நிர்வாகிகள் நீக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என சசிகலாவின் சகோதரர் வி. திவாகரன் கூறினார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:

அதிமுக அம்மா அணியில் செயல்படாமல் இருக்கும் கட்சி நிர்வாகிகள் நீக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என சசிகலாவின் சகோதரர் வி. திவாகரன் கூறினார்.
மன்னார்குடி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மன்னை மு. அம்பிகாபதியின் 81-ஆவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க பின்னர், செய்தியாளர்களிடம் திவாகரன் கூறியது:
அதிமுக அம்மா அணியில் செயல்படாத நிர்வாகிகளை விரைவில் நீக்கிவிட்டு, முழுநேர செயல்வீரர்களுக்கு பதவி அளிக்கப்படவுள்ளது.
மதுரை மேலூரில் அதிமுக அம்மா அணி சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், லட்சக்கணக்கானவர்கள் கலந்துகொண்டது வியப்பளிக்கும் செய்தி இல்லை. மூன்று தலைமை முறை கண்ட கட்சியாக அதிமுக விளங்கி வருகிறது என்பதற்கான சான்றுதான் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு வந்து கலந்துகொண்டது. இதேபோன்று, எழுச்சியுடன் அடுத்து நடைபெறவுள்ள வடசென்னை கூட்டம் அமையும்.
திருவாரூரில் ஆக. 19-ஆம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு கட்சியினர் யாருக்கும் அழைப்பில்லை.
கல்வி நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியும், நல உதவித் திட்டங்கள் வழங்குகிறோம் எனக் கூறி மாணவ, மாணவியரையும், மகளிர் சுய உதவிக் குழுவினரையும் கூட்டம் காட்ட ஆள்களை திரட்டி வருகின்றனர். மேலும், அரசு செலவில் விழா நடத்தி கணக்கு காட்ட உள்ளனர்.
எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அதிமுக கட்சியின் ஆட்சி நடைபெறும் நேரத்தில், அவரது நூற்றாண்டு விழாவை அதிமுகவின் சார்பில் நடத்துவதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறார்கள் எனத் தெரியவில்லை.
கட்சியின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மன்னார்குடியில் நடத்த உள்ளோம் என்றார் திவாகரன்.
அப்போது, வி. திவாகரனின் மனைவி லதா, கட்சியின் மாநில அமைப்புச் செயலர் எஸ். காமராஜ், முன்னாள் எம்எல்ஏ கு. சீனிவாசன், நகர்மன்ற முன்னாள் தலைவர் சிவா. ராஜமாணிக்கம், முன்னாள் துணைத் தலைவர் டி.என். பாஸ்கர், மூத்த வழக்குரைஞர் பி. தமிழரசன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆ. ஆனந்தராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →