கட்சிப் பதவியிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கம்: தினகரன்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் புறநகர அதிமுக செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அதிமுக (அம்மா) அணி துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் புறநகர அதிமுக செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அதிமுக (அம்மா) அணி துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.
அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், ஓபிஎஸ் தலைமையிலான அணியும் ஒன்றாக இணைந்த நிலையில், இதற்கு தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து தனக்கு எதிராகச் செயல்படும் பலரையும் கட்சிப் பதவிகளிலிருந்து நீக்கி தினகரன் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமின்றி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரையும் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்குவதாக தினகரன் அறிவித்து வருகிறார்.
அவர்களுக்குப் பதிலாக தனது ஆதரவாளர்களை கட்சிப் பொறுப்பில் நியமிப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். ஆனால், இவ்வாறு நீக்கப்பட்டவர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். "தினகரன் கட்சியிலேயே இல்லாத போது அவரின் நீக்கமும், புதிய உறுப்பினர்கள் நியமனமும் செல்லாது' என அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.,க்கள் பலரும் பதிலளித்து வருகின்றனர்.
இந்நிலையில், தினகரன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாக அறிவித்துள்ளார்.
அவருக்குப் பதிலாக எஸ்.கே.செல்வம் அந்தப் பதவியில் நியமிக்கப்படுவதாகவும், சசிகலாவின் ஒப்புதலுடன் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.