பெட்ரோலிய மண்டல பிரச்னையில் திமுகவின் நிலைப்பாடு என்ன?: ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி
கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்கப்படுவது தொடர்பான விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்கப்படுவது தொடர்பான விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்க அனைத்துத் தரப்பிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால், இந்தப் பிரச்னையில் திமுக தரப்பில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் அமைதி பல்வேறு ஐயங்களை எழுப்பியுள்ளது.
செங்கத்தில் மு.க.ஸ்டாலினிடம் பெட்ரோலிய மண்டலம் அமைப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, சம்பந்தமே இல்லாமல் குண்டர் சட்டம் குறித்துப் பேசினாரே தவிர, இதுகுறித்து ஒரு வார்த்தைக் கூட உதிர்க்கவில்லை. காஞ்சிபுரத்திலும் இந்தத் திட்டத்தை திமுக ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா? என்பது குறித்து ஸ்டாலின் கூறவில்லை. அதைத் தொடர்ந்து அறிவாலயத்தில் பேட்டியளித்தபோது, இதனைக் கண்டித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளேன் என்று கூறி எந்தப் பதிலும் அளிக்க மறுத்துவிட்டார்.
உண்மையில் பெட்ரோலிய மண்டலம் அமைப்பதைக் கண்டித்து திமுகவோ, மு.க.ஸ்டாலினோ இன்றுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
கடலூர், நாகை மாட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்கும் திட்டத்துக்கான இடங்கள் 2007 -08 -ஆம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் அடையாளம் காணப்பட்டுள்ளன. மு.க.அழகிரி மத்திய அமைச்சராக இருந்தபோது இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்.
குட்கா ஊழல்: குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டியது மிகவும் அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எனவே, சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.