முகப்பு
தமிழ்நாடு

முன்னேற்பாடு இல்லாமல் ஜிஎஸ்டி வரி அமல் : மு.க.ஸ்டாலின் கண்டனம்

எவ்வித முன்னேற்பாடு நடவடிக்கையும் எடுக்காமல் ஜிஎஸ்டி வரியை தமிழக அரசு அமல்படுத்துவதாகக் கூறி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:19 PM
பகிர்:

எவ்வித முன்னேற்பாடு நடவடிக்கையும் எடுக்காமல் ஜிஎஸ்டி வரியை தமிழக அரசு அமல்படுத்துவதாகக் கூறி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஒரே நாடு ஒரே வரி என்று வம்படியாக சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அவசரமாக மத்திய அரசு கொண்டு வருகிறது. அதை விட வேகமாக அதிமுக அரசு இந்தச் சட்டத்துக்கு பேரவையில் ஒப்புதலைப் பெற்று ஜூலை 1 முதல் அமல்படுத்த உள்ளது.
வணிகர்கள் உள்பட அனைவராலும் அச்சம் தெரிவிக்கப்பட்ட பிறகும் ஒரு சட்டத்தை எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் இந்த வரியை அதிமுக அரசு அமல்படுத்த துடிப்பது கடும் கண்டனத்துக்குரியது.
சரக்கு மற்றும் சேவை வரிச் சட்ட மசோதாவை முதன்முதலில் மத்திய அரசு கொண்டு வந்த போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அனைத்து மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி ஆதரவும் கோரினார்.
ஆனால், அதிமுக அரசு சுட்டிக்காட்டிய ஆட்சேபங்கள் எதற்கும் மத்திய அரசு தீர்வு காணவில்லை என்ற போதிலும், முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி இந்தச் சட்டத்தை ஆதரிக்கிறார்.
இந்தச் சட்டம் ஜூலை 1-இல் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் அதிமுக அரசு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை. பாதிக்கப்படும் வணிகர்கள் மத்தியில் எவ்வித விழிப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை.
தமிழகத்தில் உள்ள வணிக வரித்துறை அதிகாரிகள் விற்பனை வரி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்கள்.
ஆனால், சரக்கு மற்றும் சேவை வரி என்பது விற்பனை வரி, சேவை வரி, உற்பத்தி வரி ஆகிய மூன்று வரிகளையும் உள்ளடக்கியது. எனவே, இந்த சட்டத்தை அமல்படுத்த அவர்களுக்கும் பயற்சி அளிக்கப்படவில்லை. வணிக வரித்துறை அதிகாரிகளை இதுவரை இப்படியொரு சட்டம் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு தயார்படுத்தவில்லை. வெளி மாநில விற்பனையில் ஈடுபடும் வணிகர்களுக்கு இந்த சட்டத்தை எதிர்கொள்வது குறித்த வழிகாட்டுதல்கள் இல்லை.
ஏற்கெனவே, வறட்சியில் தமிழகம் வாடிக் கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சியில் தமிழகம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி விட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்தே வங்கி சேவைகளும், சிறு குறு வர்த்தக நிறுவனங்களும் இன்னும் சகஜ நிலைக்கு திரும்பி வரவில்லை. மாநிலத்தின் நிதி நிர்வாகம் நிலை குலைந்து விட்டது என்று ரிசர்வ் வங்கி அறிக்கையே சுட்டிக்காட்டியிருக்கிறது.
இவ்வளவு நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் அமல்படுத்தப்படும் சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அதிமுக அரசு முழுப்பொறுப்பேற்பது மட்டுமல்ல, மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே தீர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →