கட்சிக் கொடி எரிப்பு: பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வரிடம் மார்க்சிஸ்ட் கோரிக்கை மனு
கட்சிக் கொடி எரிப்பு விவகாரம் தொடர்பாக பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று முதல்வர் நாராயணசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கட்சிக் கொடி எரிப்பு விவகாரம் தொடர்பாக பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று முதல்வர் நாராயணசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கட்சியின் செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமையில் நிர்வாகிகள் வெ.பெருமாள், தா.முருகன், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், பிரபுராஜ் ஆகியோர் வெள்ளிக்கிழமை முதல்வர் நாராயணசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பதவியேற்றதை தொடர்ந்து நாட்டில் சிறுபான்மையினர், தலித்துகள், பெண்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கருத்துரிமை, உணவு உரிமை, சகிப்புத் தன்மையற்ற போக்கு, தீவிரமாகி வருகிறது. இது அரசியல் சட்டம், பாரம்பரிய பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாகும்.
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும், நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிராக போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரிகள் மீது வன்முறையை பாஜக நிகழ்த்தி வருகிறது.
பாஜக மற்றும் வகுப்புவாத அமைப்புகளால் புதுவையிலும் சமூக பதட்டம், வன்முறை சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. புதுவை மாநிலத்தில் உள்ள லாஸ்பேட்டையில் தனியார் பள்ளி மீது தாக்குதல், பெரியார் நகர் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிகளை தீயிட்டு கொளுத்தி உள்ளனர்.
இந்நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். மாநிலத்தில் நிலவும் அமைதியை சீர்குலைத்து மோதலை தூண்டுவது போல் பாஜக செயல்படுகிறது. இந்த ஜனநாயக விரோத செயலை மாநில அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
இப்பிரச்னை அரசியல் ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் எதிர்கொள்ளும் வகையில் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளோம்.
முதல்வர் இதில் தலையிட்டு கொடிகளை எரித்த பாஜகவினர், மறறும் இச்சம்பவத்துக்கு தூண்டுதலாக செயல்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராஜாங்கம் கூறியதாவது:
இதுபோன்று பாரதிய ஜனதா கட்சி செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கபட்டுள்ளது.
முதல்வரும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். அவர் மக்களுக்கு இதுபோன்று வன்முறையில் ஈடுபடுபவர்களை அடையாளம் காட்டுவோம் என்றார்.