முகப்பு
தமிழ்நாடு

மாட்டிறைச்சி விவகாரத்துக்காக மீண்டும் மெரீனா புரட்சி : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

இறைச்சிக்காக கால்நடைகளை விற்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்யாவிட்டால் மீண்டும் மெரீனா புரட்சி உருவாகும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:38 PM
இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்ய மத்திய அரசு விதித்துள்ள தடையை ரத்து செய்யக் கோரி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
பகிர்:

இறைச்சிக்காக கால்நடைகளை விற்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்யாவிட்டால் மீண்டும் மெரீனா புரட்சி உருவாகும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை ரத்து செய்யக்கோரி, திமுக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து மு.க.ஸ்டாலின் பேசியது:
மாட்டிறைச்சிக்குத் தடை என்பது நாம் உண்ணக்கூடிய உணவுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடாகும். மோடி எதைச் சொல்கிறாரோ அதைத்தான் நாம் சாப்பிட வேண்டும் எனும் நிலை தற்போது உருவாகியுள்ளது. இதன் மூலம் அரசியல் சட்டம் வழங்கியுள்ள தனிமனித உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
வறட்சியின் காரணமாக தமிழகத்தில் 400 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ள நிலையில், அவர்களுக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
திசை திருப்பம்: பாஜகவின் 3 ஆண்டு கால ஆட்சியில் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் எந்தச் சாதனையும் இல்லை. அதை மூடி மறைக்கவும், மக்களைத் திசை திருப்பும் வகையிலும் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பயம்: மாட்டிறைச்சிக்குத் தடைச் சட்டம் கொண்டு வந்து 8 நாள்கள் ஆகிவிட்டன. கேரளம், புதுச்சேரி, திரிபுரா முதல்வர்கள் இதை எதிர்த்து அறிக்கை விடுத்துள்ளனர். ஆனால், தமிழக முதல்வர் அந்த அறிக்கையைப் படிக்கவே பயப்படுகிறார்.
மெரீனா புரட்சி: இந்தப் போராட்டத்தின் மூலமாக மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சிக்கும், தமிழக ஆட்சிக்கும் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறேன். கருணாநிதியின் பிறந்த நாள் விழா வர உள்ளதால் இதனை முதல்கட்ட போராட்டமாக சென்னையில் நடத்தியுள்ளோம்.
மதுரை உயர் நீதிமன்ற கிளை தந்துள்ள தீர்ப்பை உணர்ந்து, உடனடியாக மாட்டிறைச்சி தடைச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் மீண்டும் மெரீனா புரட்சி உருவாகும் என்று ஸ்டாலின் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மு.க.ஸ்டாலின் முழக்கங்கள் எழுப்பினார்.
இதில், திமுக துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, மாநிலங்களவை திமுக குழு தலைவர் கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, மாவட்டச் செயலாளர்கள் ஜெ.அன்பழகன், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சுதர்சனம், வர்த்தக அணிச் செயலாளர் காசி முத்து மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →