11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி: உச்சநீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு
துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு செய்துள்ளது.
புதுதில்லி: துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், சட்டசபையில் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவருக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட்டனர்.
இதைத்தொடர்ந்து அரசுக் கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்த அவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி, தி.மு.க. கொறடாவும், எம்.எல்.ஏ.வுமான சக்கரபாணி சபாநாயகரிடம் புகார் செய்தார். இதேபோல், டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பார்த்திபன், ரங்கசாமி ஆகியோரும் சபாநாயகரிடம் புகார் செய்தனர்.
Advertisement
Advertisement
ஆனால் இந்த புகார்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் சக்கரபாணி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை முடிந்து ஒத்தி வைக்கப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் சமீபத்தில் தீர்ப்பு வழங்கினார்கள்.
அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறும் பொழுது 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் மீது சபாநாயகர் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருக்கும்போது, அவரது அதிகாரத்தில் தலையிட்டு, எந்த ஒரு உத்தரவையும் இந்த நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. மேலும், சபாநாயகருக்கு உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து முடிவு செய்யும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ளது.
அந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வராத நிலையில், சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. புகார் மனுக்களை பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு உத்தரவிடவும் முடியாது என்று தெரிவித்திருந்தனர்.
தற்பொழுது இந்த தீர்ப்பை எதிர்த்து தி.மு.க தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக யாரேனும் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என கோரி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களும் தனித்தனியாக உச்ச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.