முகப்பு
தமிழ்நாடு

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: ப.சிதம்பரம் கைது குறித்து மகன் கார்த்தி சிதம்பரம்

தனது தந்தையின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:53 AM
பகிர்:

தனது தந்தையின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரி, முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலையிலிருந்து, அவரை கைது செய்வதற்கான முயற்சிகளில் சிபிஐ-யும், அமலாக்கத் துறையும் ஈடுபட்டிருந்தன. எனினும், ப.சிதம்பரம் எங்கிருக்கிறார்? என்ற கேள்வி நிலவி வந்த சூழலில், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை இரவில் அவர் செய்தியாளர்களை திடீரென சந்தித்தார். 

பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, தில்லியின் ஜோர்பாக் பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு வந்தார். இதைத்தொடர்ந்து, அவரது வீட்டுக்கு வந்த சிபிஐ அதிகாரிகள், வீட்டின் வெளிக்கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததை அடுத்து, 5 அடி உயரமுள்ள மதில் சுவரில் ஏறி குதித்து, 3 அதிகாரிகள் உள்ளே சென்றனர். அவர்கள் கதவை திறந்ததைத் தொடர்ந்து, மற்ற அதிகாரிகளும் உள்ளே சென்றனர். வீட்டின் பின்புற வாயிலில் ஒரு குழு கண்காணிப்பில் ஈடுபட்டது.

இதனிடையே, ப.சிதம்பரம் வீட்டுக்கு அருகே திரண்ட காங்கிரஸார், மத்திய அரசையும் சிபிஐயையும் எதிர்த்து கோஷமிட்டனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.  இந்த பரபரப்பான சூழலில், ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், அவரை ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். 

இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
என் வாழ்நாளில் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜியை பார்த்ததில்லை. நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவர்களின் நிறுவனத்துடன் நான் தொடர்பு வைத்திருந்ததில்லை. என்னை விசாரணைக்கு சிபிஐ அழைத்துச்சென்றபோதுதான் இந்திராணி முகர்ஜியை பார்த்தேன். எனது தந்தைக்கு மட்டுமல்ல இது காங்கிரசுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கை. அரசுக்கு எதிரான எனது தந்தையின் குரலை கட்டுப்படுத்தும் முயற்சி இது. 

ப.சிதம்பரத்தை கைது செய்ய வேண்டிய அவசியமே இல்லை. எந்த ஒரு விசாரணை அமைப்பு முன்பு ஆஜராகி பதில் சொல்ல என் தந்தைக்கு எந்த நீதிமன்றமும் உத்தரவிடாத போது கைது ஏன்? சட்டரீதியில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளேன். தில்லியில் திமுக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.