முகப்பு
தமிழ்நாடு

கோவளம் அல்லது மாமல்லபுரம் போனால் நிச்சயம் வருத்தப்படுவீங்க!

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பின் போது புதுப்பொலிவுடன் காட்சி அளித்த  மாமல்லபுரம், சந்திப்பு முடிந்த ஒரு சில நாட்களிலேயே மீண்டும் குப்பை மேடாக மாறி வருகிறது.

Updated On : 15 அக்டோபர், 2019 at 11:47 AM
கோவளத்தில் தேங்கிய குப்பைகள்
பகிர்:

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பின் போது புதுப்பொலிவுடன் காட்சி அளித்த  மாமல்லபுரம், சந்திப்பு முடிந்த ஒரு சில நாட்களிலேயே மீண்டும் குப்பை மேடாக மாறி வருகிறது.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் முக்கிய பேச்சுவார்த்தைக்காக, மாமல்லபுரத்தில் கடந்த 11-ம் தேதி சந்தித்தனர். இதற்காக, கடந்த 8-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் கலைச் சின்னங்களை பார்வையிட தடை விதிக்கப்பட்டது.

இரு தலைவர்களும் திரும்பிச் சென்ற பின்னர், நேற்று முன் தினம் முதல் சுற்றுலா பயணிகள் கலைச் சின்னங்களை பார்வையிட தொல்லியல் துறை அனுமதித்தது. தலைவர்களின் சந்திப்பை ஒட்டி பொதுப்பொலிவு பெற்ற மாமல்லபுரம் பகுதிகளை சுற்றிப் பார்க்க கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Advertisement

இதையடுத்து கலைச் சின்ன வளாகங்களில் சுற்றுலா பயணிகள் வீசிச்சென்ற குப்பைகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசி வருகிறது. ஒரு மாதத்துக்கும் மேல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாமல்லபுரம் புதுப்பொலிவு அடைந்த நிலையில், ஒரு சில நாட்களிலேயே மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது.

கோவளம் கடற்கரையில்..

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் முக்கிய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கோவளத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் பிரதமர் மோடி தங்கினார். அப்போது, அதிகாலையில் விடுதியின் பின்னால் உள்ள கோவளம் கடற்கரையில் குப்பை சேகரிப்பில் ஈடுபட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வளைதலங்களில் பரவி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இதையடுத்து விடுமுறை நாளான நேற்று முன்தினம் பிரதமர் மோடி நடந்து சென்ற கடற்கரைப் பகுதியை சுற்றிப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டனர். பிரதமர் குப்பை சேகரித்த இடத்தில் இருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் குப்பை குவியல் குவியலாக தேங்கி கிடப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் முகம் சுளித்தனர்.

இதுகுறித்து கோவளம் பொது மக்கள் கூறியதாவது: பிரதமர் வருகையை முன்னிட்டு கடற்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பிரதமர் தங்கிய விடுதியின் பின்னால் மட்டுமே துய்மை செய்திருந்தனர். மற்ற பகுதிகளில் தேங்கியிருந்த குப்பையை அகற்றவில்லை. பிரதமரும் குறிப்பிட்ட பகுதியை மட்டுமே பார்வையிட்டு சென்றுவிட்டார். தற்போது, பிரதமர் நடந்து சென்ற கடற்கரையை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு வந்த சுற்றுலா பயணிகள், கடற்கரையின் நிலையை கண்டு ஏமாற்றமடைந்தனர். மேலும். தேங்கி கிடக்கும் குப்பையில் இருந்து கடும் துர்நாற்றமும் வீசுகிறது. பிரதமர் மற்றும் சீன அதிபர் வருகையால் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள கோவளம் கடற்கரைக்கு, சுற்றுலா பயணிகளின் வரத்தும் அதிகரிக்கும் நிலையில், கோவளம் கடற்கரையில் தேங்கியுள்ள குப்பையால் அரசுக்கு அவப்பெயர்தான் ஏற்படும். எனவே குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.