சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது: மு.க.ஸ்டாலின்
சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் 46 சுங்கச்சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் உள்ள 15 சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் தற்போது மாற்றியமைக்கப்பட்ட தொகையின் படி ரூ.5 முதல் 15 வரை அதிகமாக செலுத்த வேண்டும். இதன்படி 52 கிமீ க்குள் பயணிக்கும் கார், ஜீப், இலகு ரக வாகனங்களுக்கு ஒரு முறை சென்று வர ரூ.60 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதே போல் இலகு ரக சரக்கு வாகனங்கள், சிற்றுந்து ஆகியவற்றுக்கு ரூ.95 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பேருந்துகள் ரூ.195, கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் ரூ.305 செலுத்த வேண்டும். இந்த கட்டண உயர்வானது, தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி 2008 -இன்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், கட்டண உயர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்.1) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நல்லூர், பாளையம், வைகுந்தம், எலியார்பத்தி, கொடை ரோடு, மேட்டுப்பட்டி, விக்கிரவாண்டி, பொன்னம்பலப்பட்டி, நத்தக்கரை, புதூர்பாண்டியபுரம், திருமாந்துரை, மணவாசி, வாழவந்தான்கோட்டை, வீரசோழபுரம், விஜயமங்கலம் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கண்டன உயர்வுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில்,
நடுத்தர வர்க்கத்தினரையும், வணிகர்களையும் பெரிதும் பாதிக்கும் சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது!
அடிப்படை பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தாமல் கட்டணத்தை ரகசியமாக உயர்த்துவது அரசின் பகல் கொள்ளை!
சுங்கச் சாவடிகள் மக்களின் நலனை சாகடிப்பதாக இருக்கக் கூடாது! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.