இட ஒதுக்கீடு போராட்டம்: ராணிப்பேட்டையில் பாமக வாகனங்கள் தடுத்து நிறுத்தம்
இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்க சென்னை நோக்கி புறப்பட்ட பாமக வாகனங்கள் வாலாஜாபேட்டை சுங்கச் சுவடியில் தடுத்து நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்க சென்னை நோக்கி புறப்பட்ட பாமக வாகனங்கள் வாலாஜாபேட்டை சுங்கச் சுவடியில் தடுத்து நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வேண்டி சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது. அதற்கு பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார்.
அதில் பங்கேற்பதற்காக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரளான பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னையை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் காலை முதலே வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் சென்னை நோக்கி செல்லும் வாகனங்களை தணிக்கை செய்து வந்தனர். இந்நிலையில் சென்னையில் நடக்கும் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் செல்ல முறையான அனுமதி இல்லாததால் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த 300க்கும் மேற்பட்ட பாமகவினர் சுங்கச் சாவடியில் இருபுறங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியலில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு முதல் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் வாகனங்கள் தேங்கி நின்றது.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகளும் பயணிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை கண்காணிப்பாளர் மயில்வாகனன் மற்றும் வேலூர் சரக டிஐஜி காமினி ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் ஒருபகுதியாக சாலை மறியலை கைவிட்ட பாமகவினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது மேலும் காவலர்கள் குவிக்கப்பட்டு இறுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதனால் வாகன ஓட்டிகள், பயணிகள் ஆகியோர் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.