சுய ஊரடங்கு: தஞ்சாவூரில் அதிகாலையிலேயே நடைபெற்ற திருமணங்கள்
கரோனா பரவல் அச்சம் காரணமாக நாடு முழுவதும் இன்று சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், தஞ்சாவூரில் அதிகாலையிலேயே திருமண விழாக்கள் நடந்து முடிந்தன.
கரோனா பரவல் அச்சம் காரணமாக நாடு முழுவதும் இன்று சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், தஞ்சாவூரில் அதிகாலையிலேயே திருமண விழாக்கள் நடந்து முடிந்தன.
நாடு முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சாவூர் வீதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இன்று சுப முகூர்த்த நாள் என்பதால், ஏராளமானோர் திருமண வைபவங்களை வைத்திருந்தனர். சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை சிலர் வேறு தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சிலர் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தைத் தள்ளிப் போடாமல் நடத்தினர். முகூர்த்த நேரம் காலை 7 மணி முதல் 8 மணி மற்றும் 9 மணி முதல் 10 மணி வரை இருந்தாலும், அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் திருமணத்தை நடத்தி முடித்து விட்டனர். ஆனால் கூட்டம் குறைவாகவே இருந்தது.
ஒவ்வொரு திருமண நிகழ்ச்சியிலும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் 50 பேருக்குள்ளாகவே கலந்து கொண்டனர். திருமணம் முடிந்தவுடன் யாரும் சாப்பிடாமல் உடனடியாக மண்டபத்தைவிட்டு வெளியேறி வீட்டுக்குச் சென்றனர்.