பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் விடுப்பு வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அற்புதம்மாள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக எனது மகன் பேரறிவாளன் சிறையிலிருந்து வருகிறான். தற்போது என்னுடைய மகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
புழல் சிறையில் ஏற்கெனவே 50 கைதிகள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் பேரறிவாளன், கரோனா நோய்த் தொற்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,
பேரறிவாளனுக்கு 30 நாள்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், பேரறிவாளனின் விடுப்பு வரும் நவம்பர் 9-ஆம் தேதியோடு முடிவடைகிறது. எனவே மேலும் 30 நாள்கள் விடுப்பை நீட்டிக்கக் கோரி அற்புதம்மாள் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சையைத் தொடர வேண்டியுள்ளது. எனவே விடுப்பு காலத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.