வரலாற்றாசிரியர் கே.என். பணிக்கர் காலமானார்
நாட்டின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் திருவனந்தபுரத்தில் இன்று காலமானார்.
இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர், திருவனந்தபுரத்தில் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (மார்ச் 9) உயிரிழந்தார்.
திருச்சூர் மாவட்டத்திலுள்ள குருவாயூரில் 1936 ஆம் ஆண்டு பிறந்த பணிக்கர், மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக கோட்பாடுகளுக்கான தளராத குரலாகச் செயல்பட்டார். காலனித்துவ இந்தியாவின் அறிவுசார் மற்றும் கலாசார வரலாறு குறித்த சிறப்பான பணிகளுக்காக நன்கு அறியப்படுபவர்.
Advertisement
Advertisement
ஹிந்துத்துவா தேசியவாதம் மற்றும் வெறுப்புணர்வை பரப்புவதற்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். நவீன இந்திய வரலாறு, இந்திய மார்க்சிய வரலாற்றை வளப்படுத்திய பெருமைக்குரியவர்.
இவரின் இந்திய வரலாற்றுப் பணிகளைப் பாராட்டும் வகையில், 'கேரள வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில்' சார்பில் வரும் ஏப்ரல் மாதம் இவரின் 90 வது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அவரின் மறைவு வரலாற்றுத் துறைக்கு பேரிழப்பாக அமைந்துள்ளதாக அக்கவுன்சில் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தலைசிறந்த வரலாற்றாசிரியர் கே.என். பணிக்கர்
வரலாற்றின் மீது இளம் வயதிலிருந்தே ஆர்வம் கொண்டிருந்த கே.என். பணிக்கர், பாலக்காட்டில் உள்ள விக்டோரியா கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார். அதே பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
பிறகு, ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகம், தில்லி பல்கலைக் கழகத்திற்குட்பட்ட ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் இந்திய வரலாற்றுக் கல்வியில் மிகுந்த மதிப்புடைய, வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
’சுதந்திர போராட்டத்தின் ஒரு ஆவண வரலாறு’ உள்ளிட்ட பல வரலாற்றுப் புத்தகங்களை பணிக்கர் எழுதியுள்ளார். இவருடைய புத்தகங்கள் காலனித்துவ இந்தியாவை அறிஞர்கள் அணுகும் முறையை மாற்றி அமைத்தது.
Eminent Historian K.N. Panikkar Passes Away at 89
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.