மானாமதுரை: கால்வாயில் கதவணை கட்ட எதிர்ப்பு; அதிகாரியை முற்றுகையிட்டுப் போராட்டம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை பாசனக் கால்வாயை மறித்து கதவணை கட்டுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை பொதுப்பணித்துறை பொறியாளரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை பாசனக் கால்வாயை மறித்து கதவணை கட்டுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை பொதுப்பணித்துறை பொறியாளரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
மானாமதுரை ஒன்றியம் அன்னவாசல் கிராம கண்மாய் மூலம் அன்னவாசல், புதூர் ஆகிய கிராமங்களில் உள்ள பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தீத்தான்பேட்டை என்ற இடத்தில் அன்னவாசல் கண்மாய்க்கு வைகை தண்ணீர் செல்லும் கால்வாயை மறித்து மற்றொரு கிராமத்தின் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டுச் செல்ல பொதுப்பணித்துறை மூலம் கதவணை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளைத் தொடங்க கதவணை கட்டப்பட உள்ள இடத்தின் அருகே கட்டுமானப் பொருள்கள் இறக்கி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கதவணை கட்டப்பட உள்ள இடத்தை மானாமதுரை பொதுப்பணித்துறை பொறியாளர் (நீர்வள ஆதாரம்) செந்தில்குமார் பார்வையிடுவதற்காக வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அன்னவாசல், புதூர் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கால்வாயை மறித்து கதவணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொறியாளரை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.
பொதுப்பணித் துறை தேர்வு செய்துள்ள குறிப்பிட்ட இடத்தில் கதவணை கட்டக் கூடாது. மீறி அங்கு கதவணை கட்டப்பட்டால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே மற்றொரு இடத்தை தேர்வு செய்து அங்கு கதவணை கட்ட வேண்டும்.
இது குறித்து ஏற்கனவே அரசு தரப்பில் உறுதியளித்தபடி சமாதானக் கூட்டம் நடத்தி அதில் கதவணை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்த பின்னரே கதவணை கட்டுமானப் பணியை தொடங்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து உதவிப் பொறியாளர் செந்தில்குமார் இப்பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் துறையின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சமாதானக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாகவும் அதன்பின் கதவணை கட்டும் பணியை தொடங்குவதாகவும் உறுதியளித்தார். அதன் பின்னர் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.