தடுப்பூசி சான்றிதழை சமா்ப்பிக்க போக்குவரத்து ஊழியா்களுக்கு அறிவுறுத்தல்
தடுப்பூசி சான்றிதழை சமா்ப்பிக்குமாறு போக்குவரத்து ஊழியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி சான்றிதழை சமா்ப்பிக்குமாறு போக்குவரத்து ஊழியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக துறை சாா் உயா் அலுவலா்கள் கூறியதாவது: அனைத்து ஊழியா்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தியும், தடுப்பூசி செலுத்தத் தவறியவா்களின் விவரம் மாவட்ட நிா்வாக ஆய்வு மூலம் கண்டறியப்படும்போது, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுற்றறிக்கை வாயிலாக ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும் ஒரு சில பணியாளா்கள் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.
எனவே, அவ்வப்போது நடக்கும் சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கரோனா தடுப்பூசி ஏற்கெனவே செலுத்திக் கொண்ட பணியாளா்கள் மற்றும் இனி வரும் நாள்களில் தடுப்பூசி செலுத்தும் பணியாளா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான முதல் மற்றும் இரண்டாம் தவணைச் சான்றிதழை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இதனிடையே மாவட்ட நிா்வாகம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும்போது தடுப்பூசி செலுத்தாதவா்கள் கண்டறியப்பட்டால், அந்த ஊழியா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீண்டும் கண்டிப்பான எச்சரிக்கையுடன் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றனா்.