சீர்காழி: கணவர் மது அருந்துவதால் மனமுடைந்த மனைவி தற்கொலை
சீர்காழியில் கணவர் தினமும் மது அருந்தி வருவதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி: சீர்காழியில் கணவர் தினமும் மது அருந்தி வருவதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியைச் சேர்ந்தவர் ரகுவீர் (35). இவருக்கும் திருச்சி திருவெறும்பூர் கைலாசபுரம் பகுதியை சேர்ந்த சௌந்தரபாண்டியன் மகள் புவனேஸ்வரி ( 32 ) என்பவருக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு ரகுவீர் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி புவனேஸ்வரியிடம் தகராறு செய்து வந்தாராம். இதனால் கணவன் மனைவியிடையே மன வருத்தம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து புவனேஸ்வரியின் தாயார் மகாலட்சுமி சீர்காழிக்கு வந்து கணவன் - மனைவியை சமாதானம் செய்து விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் ரகுவீர் நேற்று மீண்டும் மதுகுடித்து விட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி இரவு புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீர்காழி காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.