முகப்பு
தமிழ்நாடு

நாமக்கல்: 1.60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

ஆலாம்பாளையம் பகுதியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையின் சார்பில்  இன்று  நடைபெற்றது.

Updated On : 31 ஜனவரி, 2021 at 11:30 AM
போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த மின்துறை அமைச்சர் பி. தங்கமணி.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:55 AM

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ஆலாம்பாளையம் பகுதியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையின் சார்பில் துணை இயக்குனர் (சுகாதாரம்) மரு.சோமசுந்தரம்  தலைமையில் இன்று  நடைபெற்றது.

இந்த முகாமில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா தாய்சேய் நல பெட்டகங்களையும், டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்ட காசோலையையும் வழங்கினார்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்  பேசியதாவது, நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் ஐந்து வயதிற்குட்பட்ட 1,58,491 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது நடைபெறும் முகாமில் 1.60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக கிராமப்பகுதியில் 1,105 முகாம்களும், நகராட்சி பகுதியில் 169 முகாம்களும், மொத்தம் 1,274 முகாம்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சத்துணவு, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 5,523 பணியாளர்கள்  ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பொதுமக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், சந்தைகள், சினிமா அரங்குகள், கோயில்கள், சுங்கச்சாவடி போன்ற இடங்களில் 48 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 36 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகின்றன.

சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் சுகாதாரத்துறை மற்றும் பிற துறை சார்ந்த 126 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

மேலும், அரசு வழங்கும் போலியோ சொட்டு மருந்து தரமானது, வீரியமிக்கது, பாதுகாப்பானது. எனவே நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், குறிப்பாக தாய்மார்கள் தங்கள் வீடுகளில் உள்ள இன்று பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் தற்போது நடைபெறும் முகாம்களில் அளிக்கப்படும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும், இன்றைய தினம் வெளியூர் செல்ல நேர்ந்தாலும் அருகில் உள்ள மையங்களில் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கு.ரேவதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.செந்தில், பள்ளிபாளையம் நகராட்சி முன்னாள் தலைவர் வெள்ளியங்கிரி, அரசு வழக்கறிஞர் சந்திரசேகரன், சமயசங்கிலி அக்ரகாரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள்,  கர்ப்பிணித் தாய்மார்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.