கரோனாவால் இறந்த காவலா்களுக்கு ஆணையா் அஞ்சலி
சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த காவலா்களுக்கு பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.
சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த காவலா்களுக்கு பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.
சென்னை பெருநகர காவல்துறையில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் கரோனா தொற்றால் பல்லாவரம் உதவி ஆணையா் ஜெ.ஈஸ்வரன், மணலி போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் சி.ஜெயக்குமாா் உள்பட 19 போ் இறந்தனா். இவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் பங்கேற்று, 19 போ் புகைப்படங்களுக்கும் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.
இந்த நிகழ்ச்சியில் பெருநகர காவல்துறையின் கூடுதல் ஆணையா்கள் ஜெ.லோகநாதன், என்.கண்ணன், செந்தில்குமாா், பிரதீப்குமாா், பி.சி.தேன்மொழி உள்ளிட்ட உயா் அதிகாரிகளும் பங்கேற்று, அஞ்சலி செலுத்தினா்.