சுவர் இடிந்து கூரை வீட்டின் மீது விழுந்ததில் முதியவர் பலி; பெண் காயம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த களப்பால் குலமாணிக்கம் தென் பாதி தெருவை சேர்ந்தவர் சு.மாரிமுத்து
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த களப்பால் குலமாணிக்கம் தென் பாதி தெருவை சேர்ந்தவர் சு.மாரிமுத்து (65). பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மு.அருமைக்கண்ணு (52). திங்கள்கிழமை இரவு, மாரிமுத்து, மனைவி சுந்தரம்பாள் (55) ஆகியோர் தங்களின் கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அருமைக் கண்ணுவின் ஓட்டு வீட்டின் கிழக்குக் பகுதி மண் சுவர் திடீரென இடிந்து, மாரிமுத்து கூரை வீட்டின் மீது விழுந்ததில் கூரை வீட்டின் சுவரும் இடிந்து மாரிமுத்து, சுந்தரம்மாள் ஆகியோர் மீது விழுந்தது.
இதில், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியில் மாரிமுத்து உயிரிழந்ததாக தெரிவித்ததுடன், சுந்தரம்பாளுக்கு முதலுதவி அளித்து தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையும் படிக்கலாமே.. சிபிஎஸ்இ 10, பிளஸ்-2 பொதுத் தோ்வு: அட்டவணை வெளியீடு
கடந்த சில நாள்களாக இப்பகுதியில் பெய்யும் கனமழைக் காரணமாக , மண் சுவர் ஊறியிருந்த நிலையில், நேற்றிரவு இடிந்து விழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சுவர் இடிந்து விழுந்த செய்தி அறிந்து அன்று இரவே பாதிப்படைந்த வீடுகளை பார்வையிட்டதுடன், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியினை திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து செய்தார்.
அப்போது, கோட்டூர் ஒன்றியக் குழுத் தலைவர் மணிமேகலை முருகேசன், சிபிஐ ஒன்றியச் செயலர் எம்.செந்தில்நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
உயிரிழந்த மாரிமுத்து குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமும் புதிய கான்கிரீட் வீடும் கட்டித் தர வேண்டும் என எம்எல்ஏ மாரிமுத்து கோரிக்கை விடுத்து தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.