காவேரிப்பட்டியில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இருசாயி அம்மன், தொட்டியன் சுவாமி பொங்கல் விழா
காவேரிப்பட்டி மோட்டூரில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அருள்மிகு இருசாயி அம்மன், தொட்டியன் சுவாமி பொங்கல் விழா
சங்ககிரி : சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், காவேரிப்பட்டி ஊராட்சி, மோட்டூர் கிராமத்தில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அருள்மிகு இருசாயி அம்மன் மற்றும் அருள்மிகு தொட்டியன் சுவாமி கோயில் பொங்கல்விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காவேரிப்பட்டி ஊராட்சி, மோட்டூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு இருசாயி அம்மன், அருள்மிகு தொட்டியன் சுவாமி கோயில் பொங்கல் விழா 7 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வரை நடைபெற்றது.
சனிக்கிழமை மாலை பக்தர்கள் கல்வடங்கம் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீர் எடுத்து வந்தனர். பின்னர் கோயில் வீட்டில் இருந்து உற்சவ மூர்த்தி சுவாமிகளை பக்தர்கள் அப்பகுதியில் உள்ள பதிக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று சுவாமிக்கு புனித நீர், பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது.
இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கோபி, ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி சுவாமிகளை வழிப்பட்டுச்சென்றனர்.