பயணிக்கு நெஞ்சுவலி: உயிர் காக்க ஓட்டுநர் எடுத்த முடிவு; குவியும் பாராட்டு 
தமிழ்நாடு

பயணிக்கு நெஞ்சுவலி: உயிர் காக்க ஓட்டுநர் எடுத்த முடிவு; குவியும் பாராட்டு

பேருந்தில், பயணி ஒருவருக்கு நெஞ்சுவலி என்றதும், அரசுப் பேருந்தை நேராக மருத்துவமனைக்குக் கொண்டுச்சென்று அங்கு அவரை அனுமதித்து உயிர் காக்க உதவிய ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும் பாராட்டுகள் குவிகின்றன.

DIN

தென்காசி: பேருந்தில், பயணி ஒருவருக்கு நெஞ்சுவலி என்றதும், அரசுப் பேருந்தை நேராக மருத்துவமனைக்குக் கொண்டுச்சென்று அங்கு அவரை அனுமதித்து உயிர் காக்க உதவிய ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும் பாராட்டுகள் குவிகின்றன.

அது மட்டுமல்ல.. நேரமாகிவிட்டது..  நாங்க அலுவலகம் போகணும் என்று கூக்குரலிடாமல் சக பயணிகளும், அரசுப் பேருந்து மருத்துவமனைக்குச் செல்ல முழு ஒத்துழைப்புக் கொடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 மனிதாபிமானம் செத்துவிட்டது என்று எண்ணும்போதெல்லாம் இதுபோன்ற ஏதோ ஒரு சம்பவங்கள் தான் மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை. உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்பதை நினைவூட்டுவதாக உள்ளது.

பேருந்தில் பயணித்த 69 வயதாகும் பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதும், சற்றும் தாமதிக்காமல், பேருந்தை அரசு மருத்துவமனைக்கு இயக்கி, உரிய நேரத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை கிடைத்து உயிர் பிழைக்கக் காரணமாக இருந்த ஓட்டுநர் வி. ஆறுமகசாமி மற்றும் நடத்துநர் கே. இசக்கி என்கிற குட்டிசாமியை பொதுமக்களும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளும் பாராட்டி வருகிறார்கள். 

பயணி சாஹுல் ஹமீது

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியிருப்பது என்னவென்றால், தென்காசியிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து அத்தியூத்து அருகே வந்த போது, சாஹுல் ஹமீது என்ற பயணி, சக பயணியிடம் தனக்கு நெஞ்ச வலிப்பதாகக் கூறியுள்ளார். உடனடியாக சக பயணி 108க்கு அழைப்பு விடுத்து ஆம்புலன்ஸ் வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.  20 கி.மீ. தொலைவில் இருக்கும் தென்காசியிலிருந்து ஆம்புலன்ஸ் வர வேண்டும். ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்குள் அவரது நிலைமை மோசமடைவதைப் பார்த்த  ஓட்டுநரும், நடத்துநரும், பேருந்துப் பயணிகளின் அனுமதியோடு, ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு பேருந்தை இயக்கியுள்ளார். அத்தியூத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள ஆலங்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்ட ஹமீதுக்கு அங்கு உயிர் காக்கும் முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஹமீதை மருத்துவமனையில் அனுமதித்ததோடு, அவரது உறவினர்களுக்கும் ஓட்டுநர் வி. ஆறுமுகசாமி செல்லிடப்பேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆறுமுகசாமி கூறுகையில், ஹமீதுக்கு நெஞ்சுவலி என்றதும், அவரது கையிலிருந்து பையை எடுத்துப் பார்த்தோம். அதில்  இருந்த கோப்புகள் மூலம் அவர் இதயநோயாளி என்பது தெரிய வந்தது. அரசு மருத்துவமனையும் நகருக்கு உள்ளே இருந்தது. எனவே, அங்கே விரைந்து செல்வதுதான் ஒரே வழி என்று தோன்றியது.  இதனால் சுமார் 50 நிமிடங்கள் பயண நேரம் கூடுதலானது. ஆனால், பேருந்தில் இருந்த யாருமே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று மகிழ்ச்சியோடு கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT