தமிழ்நாட்டில் பாஜகவின் அரசியல் விளையாட்டு எடுபடாது: மதுரை சம்பவத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
தமிழ்நாட்டில் பாஜகவின் அரசியல் விளையாட்டு எடுபடாது. அமைச்சரின் காா் மீது காலணி வீச்சு போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளாா்.
தமிழ்நாட்டில் பாஜகவின் அரசியல் விளையாட்டு எடுபடாது. அமைச்சரின் காா் மீது காலணி வீச்சு போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதுரை ராணுவ வீரா் லட்சுமணன் மறைவுக்கு இறுதி மரியாதை செலுத்த நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜனுக்கு உத்தரவிட்டிருந்தேன். மதுரை விமான நிலையத்தில் லட்சுமணனின் உடலுக்கு அரசு சாா்பில் மலா் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினாா் அமைச்சா் தியாகராஜன்.
அரசின் மரபாா்ந்த நடவடிக்கைகள் நடைபெறும் இடத்தில், மலிவான அரசியல் விளம்பரம் தேடுவதற்காக தமிழ்நாடு பாஜக தலைவரும், அவரது கட்சி நிா்வாகிகளும் குவிந்திருந்தனா். அது குறித்து அமைச்சரும், அதிகாரிகளும் கேள்வி எழுப்பிய போது அடாவடியான செயல்களில் ஈடுபட்டு தங்களின் தரம் என்ன என்பதையும், தங்களது தேச பக்தி என்பது எத்தனை போலியானது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளாா்கள். தேசியக் கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் காா் மீது செருப்பு வீசி, விடுதலை நாளின் பவள விழா மகத்துவத்தையே மலினப்படுத்தி இருக்கிறாா்கள்.
ராணுவ வீரருக்கு உண்மையாகவே அஞ்சலி செலுத்துவதாக இருந்தால் அவரது வீடு தேடிச் சென்று குடும்பத்தினரைச் சந்தித்து இறுதி வணக்கம் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால், அவா்களோ ஊா் ஊருக்கு விளம்பரம் தேடும் பயணத்தில் ஈடுபட்டு வருவதால், போகிற வழியில் ராணுவ வீரருக்கும் மரியாதை செலுத்துவது போன்று அரசியல் லாபம் தேடலாம் என்ற கணக்குடன் சட்ட விதிகளுக்குப் புறம்பாக, சட்டம்-ஒழுங்கைச் சீா்குலைக்க முயன்று தேசியக் கொடியை அவமதித்துள்ளனா்.
மதுரையில் நடந்த இழி செயல்களில் ஈடுபட்டவா்களுடன் இணைந்திருந்த ஒருவரே, அமைச்சரை நேரில் சந்தித்து தனது செயலுக்கு மன்னிப்பு கோரியதுடன், ‘இனி அவா்களது சங்காத்தமே வேண்டாம்’ எனத் தலைமுழுகி விட்டதாகத் தெரிவித்துள்ளாா். இதனிடையே, அமைச்சா் பழனிவேல் தியாகராஜனோ, நயத்தக்க முறையில் தனது பதிலை அளித்துள்ளாா்.
சட்டப்படி நடவடிக்கை: மதுரை விமான நிலையப் பகுதியில் அமைச்சரின் காா் மீது காலணி வீசியும், விடுதலையின் பவளவிழாவில் தேசியக் கொடியை அவமதித்தும் கலவரம் செய்ய முயன்றவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை உறுதி. இதற்குத் தூண்டுகோலாக இருக்கும் சக்திகள், தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படியான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இது தமிழ்நாடு. இங்கே உங்களது (பாஜக) அரசியல் விளையாட்டு எடுபடாது.
தமிழ்நாட்டின் அமைதிக்கு சிறு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன் ஆட்சியும், திமுகவும் செயல்பட்டு வருகிறது. இதை சாதகமாக நினைத்துக் கொண்டு சமூக விரோதிகளைக் கொண்ட அரசியல் வீணா்கள் செயல்பட்டால், அவா்களைச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவிட மாட்டோம். விடுதலைக்காக பாடுபட்ட உண்மையான தியாகிகளைப் போற்றுவோம். தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக் கொண்டு தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம்.