சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது ஏன்? செந்தில் பாலாஜி
மக்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சென்னையில் சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்
மக்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சென்னையில் சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இன்று (10.12.2022) தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிக்க.. குஜராத்தில் காங்கிரஸ் அடைந்தது தோல்வியே அல்ல! அதற்கும் மேல்
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர்/பகிர்மானம் மா.சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று கடுமையான மழையும், காற்றும் இருந்தது. நள்ளிரவு வரை எங்கும் மின் தடை இல்லை. நள்ளிரவுக்குப் பிறகு காற்று அதிகமானதால் எந்தவித உயிர்ச் சேதமோ, பாதிப்போ ஏற்படா வண்ணம் பாதுகாப்பு கருதி மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையும் படிக்க.. ஹிமாசலில் பாஜக எப்படி தோற்றிருக்கிறது என்று பாருங்கள்!
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 355 துணைமின் நிலையங்களில், 10 துணை மின் நிலையங்களில் மட்டுமே மின்சாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 33கி.வோ., 11 33கி.வோ.,.22 கி.வோ., 110 கி.வோ.,230 கி.வோ., மற்றும் 400 கி.வோ., உட்பட மொத்தம் 622 பீடர்களில் கன மழை மற்றும் வேகமான காற்று வீசியதின் காரணமாக மின் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சென்னையில் சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது,
நேற்று இரவு முழுவதும் சென்னையில் 1,100 பணியாளர்களும், ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 11,000 பணியாளர்களும் களத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்று அதிகாலை தொடங்கி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்ட இடங்களில் கள ஆய்வு செய்து பாதிப்புகள் உள்ளதோ அவற்றை எல்லாம் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு இன்று மதியத்திற்கு முன்னதாகவே சீரான மின் விநியோகம் வழங்கப்படக்கூடிய வகையில் களத்தில் பணியாளர்கள், அலுவலர்கள் என அனைவரும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
எனவே, இன்று மதியத்திற்கு முன்னதாகவே அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின் விநியோகம் வழங்கப்படும். சென்னையைப் பொறுத்த வரையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஆர்எம்யு வளைய சுற்றுத்தர அமைப்பின் மீது மரம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. அவற்றை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மீதம் இருக்கக்கூடிய புறநகர் பகுதிகளில் எந்தெந்த இடங்களில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளது என்பதை களத்திலே சென்று ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அந்த ஆய்வு பணிகள் முடிந்த பிறகு தான் சேதம் பற்றிய விவரங்கள் தெரியவரும். மரங்கள் விழுந்து ஏற்பட்ட பாதிப்புகளை சென்னை மாநகராட்சி உட்பட உள்ளாட்சி அமைப்புகள் அகற்றிய பிறகு மின் விநியோகம் படிப்படியாக வழங்கப்படும்.
முதல்வரால் துவக்கிவைக்கப்பட்ட மின்னகத்தில் நேற்று வரையில் 13,10,000 அழைப்புகள் பதிவாகி உள்ளது. நேற்று வரை 26,251 அழைப்புகள் நள்ளிரவு 12.00 மணி வரை பதிவாகி உள்ளது. நள்ளிரவு 12.00 மணிமுதல் தற்பொழுது வரை 16,000 அழைப்புகள் பதிவாகியுள்ளது. வரப்பெற்ற அழைப்புகளின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து இடங்களிலும் சீரான மின் விநியாகம் வழங்கிய பிறகே முழுமையான பாதிப்புகள் தெரியவரும். பணியாளர்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று இரவு முதலே சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குவதற்கான இடம் உட்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.