முகப்பு
தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு வழக்கு ஜன., 4ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம்

அதிமுக பொதுக் குழு செல்லும் என்று சென்னை உயர் நீதின்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:06 AM
உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)
பகிர்:

புது தில்லி: அதிமுக பொதுக் குழு செல்லும் என்று சென்னை உயர் நீதின்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்பை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை இன்றும் உச்சநீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டிருந்தது.  ஆனால், நேரமின்மை காரணமாக, வழக்கை நாளைக்கு ஒத்திவைக்கலாமா என்று நீதிபதிகள் கேட்ட போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின் தள்ளிவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜனவரி 4ஆம் தேதிக்கு தள்ளிவைப்பதாகக் கூறிய நீதிபதிகள், அதற்குள், எழுத்துப்பூர்வமான அனைத்து வாதங்களையும் தாக்கல் செய்வதை இரு தரப்பும் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை வானகரத்தில் ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகஸ்ட் 17-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், ‘ஜூலை 11 அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தாா்.

இதை எதிா்த்து எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் தாக்கலான மேல்முறையீடு மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்பில், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீா்ப்பை ரத்து செய்ததுடன், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று கூறி தனி நபா் நீதிபதியின் தீா்ப்பு ரத்து செய்யப்படுவதாக தீா்ப்பளித்தது.

இந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம், பி.வைரமுத்து தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமா்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →